456.

    கற்றறிந்த மெய்யுணர்ச்சி யுடையோ ருள்ளக்
        கமலத்தே யோங்குபெருங் கடவு ளேநின்
    பொற்றகைமா மலரடிச்சீர் வழுத்து கின்ற
        புண்ணியர்தங் குழுவிலெனைப் புகுத்தி யென்றும்
    உற்றவருட் சிந்தனைதந் தின்ப மேவி
        உடையாயுன் னடியவனென் றோங்கும் வண்ணம்
    சிற்றறிவை யகற்றியருட் குருவாய் என்னைச்
        சிறுகாலை யாட்கொண்ட தேவ தேவே.

உரை:

     கற்றற்குரிய நன்னூல்களைக் கற்று நல்லறிவு பெற்று மெய்யுணர்வு எய்திய சான்றோருடைய மனத்தாமரையின் கண் உயர்ந்து விளங்கும் பெரிய கடவுளாகிய முருகப் பெருமானே, பொன் போன்ற அழகிய மலர் போன்ற திருவடிப் புகழை ஓதுகின்ற புண்ணியர்களின் கூட்டத்தில் என்னையும் சேர்த்து ஒருவனாக்கி எப்பொழுதும் நிலவுவதாகிய திருவருட் சிந்தனையை யுண்டாக்கி அதன்கண் ஊறுகின்ற ஞானானந்தத்தை நுகர்வித்து, என்னை யுடையவனாகிய நீ உனக்கு அடியவன் என்று யான் யாவரும் அறிய உயர்ந்தோங்குமாறு, என்னுடைய அறிவின் சிறுமையைப் போக்கி அருட் குருவாய் என்னை இளமைப் போதிலேயே ஆண்டு கொண்ட தேவ தேவனே, உன் கருணையை என்னென்பேன்! எ. று.

     கல்வி யறிவால் மனக்கசடு போக்கி உண்மையறிவு கொண்டு மெய்ப் பொருளின் மெய்ம்மை யுணரும் பெருமக்களின் திருவுள்ளத் தாமரை மாசு மறுவின்றித் தூய்மையின் வடிவாய்த் துலங்குவது பற்றி இறைவன் அதன் கண் விளங்கித் தோன்றுவதால், “கற்றறிந்து மெய்யுணர்ச்சி யுடையோர் உள்ளக் கமலத்தே ஓங்கு பெருங் கடவுளே” என்று பராவுகின்றார். “அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற் றைம்புலனும் அடக்கி ஞானம் புகலுடையோர் தம் முள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்” (வீழிமிழலை) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. நிறம் பற்றிப் பொன்னையும், அழகும் ஒளியும் தோன்றத் தகையும், மென்மை விளங்கு மலரும் கொண்டு, “பொற்றகை மாமலரடி” எனப் புகழ்கின்றார். இறைவன் திருவடிப் புகழை நினைப்பதும் பேசுவதும் வணங்குவதும் சிவபுண்ணியமாதலால், திருவடியைப் புகழும் நல்லோரை, “சீர் வழுத்துகின்ற புண்ணியர்” என்றும், அவரது கூட்டம் திருவடி ஞான வின்ப நினைவுகளையே மனத்தின்கண் எப்போதும் நிலவச் செய்தலால், “புண்ணியர் தம் குழுவில் எனைப் புகுத்தி என்றும் உற்ற அருட் சிந்தனை தந்து இன்பம் மேவி” என்றும் இயம்புகின்றார். புண்ணியர் குழுவிற் புகும் தகுதி எனக்கு இல்லையாதலால் நீயே என்னை அதனுட் புகுத்த வேண்டு மென்பார், “குழுவில் எனைப்புகுத்தி” என்கின்றார். இவ்வாறே வாதவூரரும், “புகவே தகேன் உனக்கு அன்பருள் யான் என் பொல்லா மணியே” (சதகம்) என்பது காண்க. சில்வாழ்நாளும் பல்பிணியும் கொண்ட உயிர்க்கு அறிவும் சிறுமை யுடைத் தாதலால், அச்சிறுமை நீங்கினாலன்றிப் பெருமை சான்ற அடியார் இனம் சார்ந்து ஓங்குதல் இயலாது என்பது பற்றி, “அடியவன் என்று ஓங்கும் வண்ணம் சிற்றறிவை யகற்றி” என உரைக்கின்றார். “அறிவிலாத எனைப் புகுந்தாண்டு கொண்டு அறிவதை யருளி மேல் நெறியெலாம் புலமாக்கிய எந்தை” (சதகம்) என மணிவாசகப் பெருமான் அருளுமாறு காண்க.

     இதனால் அருட் குருவாய்ப் போந்து அறிவருளி அடியவனாய் ஓங்கச் செய்த வண்ணம் விளக்கியவாறாம்.

     (7)