457.

    ஞாலமெல்லாம் படைத்தவனைப் படைத்த முக்கண்
        நாயகனே வடிவேற்கை நாத னேநான்
    கோலமெலாங் கொடியேனற் குணமொன் றில்லேன்
        குற்றமே விழைந்தேனிக் கோது ளேனைச்
    சாலமெலாஞ் செயுமடவார் மயக்கி னீக்கிச்
        சன்மார்க்க மடையவருள் தருவாய் ஞானச்
    சீலமெலா முடையவருட் குருவாய் வந்து
        சிறுகாலை யாட்கொண்ட தேவ தேவே.

உரை:

     சிவஞானச் செந்நெறிக்குரிய ஒழுக்கமே யுடைய அருட் குருவாய் வந்து முன்னே என்னை இளம் பருவத்தில் ஆண்டு கொண்ட தேவதேவனே, உலகம் அனைத்தையும் படைத்த பிரமதேவனை முன்பு படைத்தருளிய முக்கண்களை யுடைய நாயகனே, கூரிய வேற்படையை ஏந்தும் கையை யுடைய தலைவனே, புறக் கோலங்களாலும் நான் கொடியவன்; நற்குணம் ஒன்றும் இல்லாதவன்; குற்றமாவன வற்றைச் செய்வதையே விரும்புவேன்; இத்தகைய குற்றம் நிறைந்த என்னைச் சாலங்களைப் புரியும் மகளிர் செய்யும் மயக்கத்திலிருந்து விடுவித்துச் சன்மார்க்கத்தை அடையுமாறு அருள் புரிதல் வேண்டும், எ. று.

     அகநிலைக்கு ஞானமும் புறநிலைக்குச் சீலமும் வேண்டப்படுதலின், “ஞானச் சீலமெலாம் உடைய அருட்குருவாய் வந்து” என்று கூறுகின்றார். வானவெளியில் தனித்தனியாகச் சுழலுகின்ற அண்டங்களும் நிலமும் யாவும் அடங்க, “ஞாலமெலாம்” எனக்குறிக்கின்றார். எல்லாம் - “இதனை எஞ்சாப் பொருட்டாய் வருவதோர் உரிச்சொல் லென்பாரு முளர்” என்பர் சேனாவரையர் (தொல். சொல். 186). பிரமனைப் படைத்தவன் சிவன் என்றற்குப் “படைத்தவனைப் படைத்த முக்கண் நாயகன்” என வுரைக்கின்றார். சிவத்தின் இளமைக் கோலம் முருகனாதலால், “முக்கண் நாயகனே” என்றவர், “வடிவேற்கை நாதனே” என அடுத்து மொழிகின்றார். கோலம், ஈண்டு ஆடவர்க்குரிய புறத் தோற்றம் சுட்டி நின்றது. எனது புறக்கோலம் காணும் பிறர்க்கு மனத்தே வெறுப்பை விளைவிப்ப தென்பார், “கோல மெலாம் கொடியேன்” எனவும், குணம் செய்கைகளும் நல்லவை யல்ல என்பாராய்க் “குணம் ஒன்று இல்லேன்” எனவும், இனிய கோலத்தையோ நல்ல குணஞ் செயல்களையோ விரும்பாமையோடு நில்லாமல், குற்றமாவன வற்றையே பெரிதும் விரும்பினேன் என்பாராய்க் “குற்றமே விழைந்தேன்” எனவும் கூறுகின்றார். சிறப்பும்மை, தொக்கது. ஏகாரம், தேற்றம். கோது- குணத்துக்கு மாறாய் விலக்கத் தகுவதாகிய குற்றம். முற்றவும் கடியலாகாத வெகுளி முதலாய குற்றங்கள் கோது என்னும் வகையுள் அடங்கா என அறிக. காமம் வெகுளி முதலியன முற்றவும் கடியலாகாத குற்றங்களெனப் பரிமேலழகர் முதலிய பெரியோர்கள் உரைப்பது காண்க. சாலம்- மாயப் பொய்கள்; சாலம் புரியும் மகளிரை, மாயமகளிர் பொய்ப் பெண்டிர் என்றெல்லாம் சான்றோர் வழங்குவர். இயற்கை போலச் செயற்கையாய் நடிப்பது சாகசம். சாகசம் வேறு சாலம் வேறு. மாய மகளிர், பொய்ப் பெண்டிர் என்பவற்றுள், மாயத்துட் சாலமும் பொய்ம்மைக்குள் சாகசமும் அடங்கும். இரண்டாலும் பிறரை மயக்குவது மயக்கம். ஆடவரின் இளமைக் காலத்து மேனியொளி ஞாயிற்றின் இளவெயிலும் இளமகளிரின் மேனியொளி வேனிற் காலத்து முழுமதியின் தண்ணிலவும் போலக் காண்பாரை மயக்குவன என விஞ்ஞானிகள் உரைப்பதற் கொப்ப, “மடவார் மயக்கின் நீக்கி” என உரைக்கின்றார். மடவார் - இளம் பருவ மகளிர். சன்மார்க்கம் என்பது சத் மார்க்கம் என்ற வடசொல் இரண்டாலாய தொடர்மொழி. மார்க்கம் என்பது வழி; நெறியுமாம். சத், உண்மை மெய்ம்மை என்ற பொருளை யுணர்த்துவது. எனவே, சன்மார்க்கம், உண்மை நெறி, மெய்ந் நெறி எனத் தமிழில் வரும். சிவநெறியே சன்மார்க்க மென்பாராய், “நிலவு மெய்ந்நெறி சிவநெறி” (ஞான. புரா. 820) என்று சேக்கிழார் கூறுவர். சிவமும் உயிரும் உலக முதற் காரணமான மாயையுமாகிய மூன்றும் அனாதி நித்தமாய்ச் சத்துப் பொருளாதலால் இவற்றின் இயல்பையும், ஒன்றி னொன்றிற்குமுள்ள தொடர்பையும் காட்டும் சிவநெறி சன்மார்க்கம் எனப்படுகிறது. இம்மூன்றையும் வேறு வேறு பெயர்களாற் சுட்டி இயைபு கூறுவனவும் சன்மார்க்க மாதலால், வேறுபடுத்தற்குச் சைவம் என்று வழங்குகின்றன. இறைவன் ஒருவன் உண்டெனக் கொண்டு பலவேறு நெறிகளால் மக்களால் போற்றப்படும் சமயங்கள் பலவும் சன்மார்க்க மாதலால், அவற்றின்பால் காய்தல் உவத்தலின்றி நடுநின்று உண்மை காணும் நெறியும் உண்டு; அதனைச் சமரச சன்மார்க்கம் என்பர். இங்கேள் வடலூர் வள்ளல், “சன்மார்க்கம் அடைய அருள்வாய்” எனப் பொதுப்பட வேண்டுதலால், சேக்கிழார் பெருமான், தமிழால் மெய்ந்நெறி என எடுத்துரைக்கும் சன்மார்க்கத்தையே வேண்டுகின்றார். என்று காணலாம். இனி, பொருள்களில் தலையாயதும் நிலையாயதுமாகிய பொருள் ஞானமாதலால், சத்தாகும் பொருள் ஞான மெனக் கொண்டு, ஞானமார்க்கமே சன்மார்க்கம் என்று சைவநூல்கள் உரைக்கின்றன. ஞான மார்க்கத்தில் சிவத்தை வழிபடுவது முண்டு. “ஊனத் திருள் நீங்கிட வேண்டில், ஞானப் பொருள் கொண்டடி பேணும்” (மயிலாடு) என்று திருஞான சம்பந்தர் கூறுவதும், “ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள், ஞானத்தால் தொழுவேன் உனை நானலேன்” (குறுந். தனி) என்று திருநாவுக்கரசர் கூறுவதும் ஞானமார்க்கமாகிய சன்மார்க்க முண்மை அறியப்படும்.

     இதனால், சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவனாகிய நீ மடவார் மயக்கின் நீக்கிச் சன்மார்க்கம் அடைய அருள்க என வேண்டியவாறாம்.

     (8)