458. கற்பனையே யெனுமுலகச் சழக்கி லந்தோ
காலூன்றி மயங்குகின்ற கடைய னேனைச்
சொற்பனமிவ் வுலகியற்கை யென்று நெஞ்சம்
துணிவுகொளச் செய்வித்துன் துணைப்பொற் றாளை
அற்பகலும் நினைந்துகனிந் துருகி ஞான
வானந்த போகமுற வருளல் வேண்டும்
சிற்பரசற் குருவாய்வந் தென்னை முன்னே
சிறுகாலை யாட்கொண்ட தேவ தேவே.
உரை: மேலான ஞான மெய்ப் பொருளை யுணர்த்தும் குருமூர்த்தியாய் வந்து இளம் பருவத்தே முன்பு ஆண்டருளிய தேவ தேவனே, கற்பனையே யன்றி வேறில்லை இவ்வுலகம் என வுரைக்கும் பொய் யுரையை நம்பி அதன்கண் கருத்தை நிறுத்தி மயங்கும் கடையவனாகிய எனக்கு இவ்வுலகியல் ஒரு கனவுக் காட்சி யென்று நெஞ்சம் அறிந்து துணிபு கொள்ளச் செய்து, உனது அழகிய திருவடியையே இரவும் பகலும் நினைந்து கனிந்து மனமுருகி அவண் சுரக்கும் ஞானானந்த இன்பம் நுகர்தற்கு அருள் புரிய வேண்டும், எ. று.
கற்பனை, இல்லதை யுள்ளதாகவும், உள்ளதை இல்லது போலவும், சிறியதைப் பெரியதாகவும் மனத்தின்கண் நினைத்துக் காண்பது. ஒரு முகத்துக்குப் பல முகங்களையும், இரு கைக்குப் பல கைகளையும், மன வுருவில் விலங்கின் தலையும் காலும் பொருந்த அமைத்துக் காண்பதும் பிறவும் கற்பனை வகைகளாம். காணப்படும் இவ்வுலகமும் இவ்வாறு காண்பதொரு கற்பனையே யன்றி உண்மை யன்று என்று சில சமயவாதிகள் கூறுவர். அவர்களது சொல் வலையில் அகப்பட்டு மயங்கும் தன்மை தன்பால் இருந்தமை கூறலுற்றவர், “கற்பனையே எனும் உலகச் சழக்கில் அந்தோ காலூன்றி மயங்குகின்ற கடையனேன்” என்று கூறுகின்றார். சழக்கு - பொய்யுரை. தெளிவில்லாமையாற் கடையனானேன் என்றற்கு, “மயங்குகின்ற கடையனேன்” என்று உரைக்கின்றார். உறக்கத்தில் தோன்றி இன்புறுத்திய கனவுக் காட்சி விழித்தவுடன் நனவில் நில்லாது மறைந் தொழிவது போல உலகியற் காட்சியும் வாழ்வும் நிலையின்றிக் கெடும் என்று கண்டு உலகின் நிலையாமையை என் நெஞ்சம் துணிய வேண்டும் என்பாராய், “சொற்பனம் இவ்வுலகியற்கை என்று நெஞ்சம் துணிவு கொளச் செய்வித்து” என்று இயம்புகிறார். சொற்பனம் - கனவு. “நில்லாத வுலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கை அல்லேன் என்றறத் துறந்து” (நாவுக். புரா. 37) என நாவுக்கரசர் நீங்கியது இங்கு நினைவு கூரத் தக்கதாம். துணிவு - “நிற்பார் நிற்க; நில்லா வுலகில் நில்லோம்” (யாத்தி) என மணிவாசகர் கொள்வது போலும் துணிவு. துணிவு பிறந்த வழி இறைவன் திருவடி யல்லது நிலைத்த புகலிடமாவது பிறிதில்லை யென்னும் வண்ணம் எழுந்து திண்ணிதாகலின், இரவும் பகலும் திருவடி நினைவே மிக்குறுவது உணர்ந்து, “உன் துணைப் பொற்றாளை அற்பகலும் நினைந்து” எனவும், நினைவு பெருகப் பெருக மனத்திடைக் கனிவும் உருக்கமும் மிகுதலாற் “கனிந்து” எனவும், “உருகி” எனவும். அவ்வுருக்கத்திற் சுரக்கும் சிவானந்த நுகர்ச்சியை எய்த வேண்டும் என முறையிடுவாராய், “ஞானவானந்தப் போகமுற அருளல் வேண்டும்” எனவும் வேண்டுகின்றார். அல் என்னுமிடத்து எண்ணும்மை எதுகை பற்றித் தொக்கது.
இதனால், என்னைச் சிறுகாலை ஆண்டருளிய தேவ தேவனாகிய நீ உலகியலுண்மை நிலை யுணர்ந்து பொற்றாளை நினைந்து ஞானானந்த போகமுற அருளுக என முறையிட்டவாறாம். (9)
|