459.

    பன்னிருகண் மலர்மலர்ந்த கடலே ஞானப்
        பரஞ்சுடரே ஆறுமுகம் படைத்த கோவே
    என்னிருகண் மணியேயெந் தாயே யென்னை
        ஈன்றானே யென்னரசே யென்றன் வாழ்வே
    மின்னிருவர் புடைவளங்க மயின்மீ தேறி
        விரும்புமடி யார்காண மேவுந் தேவே
    சென்னியினின் னடிமலர்வைத் தென்னை முன்னே
        சிறுகாலை யாட்கொண்ட தேவ தேவே.

உரை:

     எனது இளம் பருவத்தேவந்து என் தலைமேல் திருவடியை வைத்து ஆண்டு கொண்ட தேவ தேவனே, பன்னிரண்டு கண்களாகிய பூக்கள் மலர்ந்த கடல் போன்றவனே, மேலான ஞானச் சுடரே, ஆறு முகங்களைக் கொண்ட தலைவனே, என்னுடைய இரண்டு கண்களிலுமுள்ள மணி யொப்பவனே, எனக்குத் தந்தையே, எனது அருளரசாக உள்ளவனே, என்னுடைய வாழ்முதலே, மின்னலைப் போன்ற இடையை யுடைய மகளிர் இருவர் இரு பக்கத்திலும் இருந்து விளங்க மயில் மேல் இவர்ந்து, அன்புறுகின்ற அடியார்கள் கண்டு மகிழ எழுந்தருளும் தேவனே, உன் திருவருட்கு வணக்கம் எ. று.

     தலையில் சூடுவது பூவாதலால் அதற்கொப்ப என் தலையில் உன் திருவடியாகிய மலர்களைச் சூட்டினாய் என்பார், “சென்னியில் நின் அடிமலர் வைத்து என்னை ஆட்கொண்டாய்” என்று இயம்புகின்றார். கடலில் பூக்கள் மலர்வதில்லை யாதலால், “மலர் மலர்ந்த கடலே” என்பது அபூதவணி யென்பர். மலர் போலுவது பற்றிக் “கண்மலர்” என்கின்றார். பரஞான வொளி, “ஞானப் பரஞ்சுடர்” எனப் படுகிறது. கோ - தலைவன். கண்ணிற்கு மணி போல, எனக்கு நீ இருக்கின்றாய் என்பார், “என்னிரு கண்மணியே” என்று புகல்கின்றார். வாழ்வளிப் பவனாதலால், “வாழ்வே” என்று உபசரிக்கின்றார். “மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே” (பள்ளி) என்பது திருவாசகம். மின், ஆகு பெயராய், மின்னற் கொடி போலும் இடையை யுடைய மகளிர்க் காயிற்று. இருவராவார் வள்ளிநாயகியாரும் தெய்வயானையாரு மாவர். புடை - பக்கம். மயில் மீது எழுந்தருளும் காட்சி மெய்யன்பர்க்குப் பேரின்பம் தருவதால், “விரும்பும் அடியவர் காண மேவும் தேவே” என்று போற்றுகின்றார்.

     இதனால், இளமையில் தன் தலைமேல் திருவடி வைத்து ஆட்கொண்ட முருகப் பெருமான் அடியவர் காணக் காட்சி யருளும் நலம் தெரிவித்தவாறாம்.

     (10)