46.

    மணியே தினைப்புன வல்லியை வேண்டி
        வளர் மறைவான்
    கணியே யெனநின்ற கண்ணே யென்
        னுள்ளக் களி நறவே
    பணியே னெனினும் எனைவலிந்தாண் டுன்
        பதந்தரவே
    நணியே தணிகைக்கு வாவென வோர்மொழி
        நல்குவையே.

உரை:

     மாணிக்கமணி போல்பவனே, கொடி போன்ற வள்ளி நாயகியாரை விரும்பித் தினைப் புனத்தில் வளரும் வேத வடிவான பெரிய வேங்கை மரமாய் நின்ற என் கண்ணே, என் மனத்துக்கு மகிழ்ச்சி நல்கும் தேனே, உன் திருவடியைப் பணிவதிலனாயினும் வலிய ஆட்கொண்டு நின் திருவடியை எனக்குத் தருதற் பொருட்டு விரைந்து தணிகைப் பதிக்கு வருக என்று ஒரு சொல்லை வழங்கி யருள்க, எ. று.

     நிறத்தாலும் ஒளியாலும் சிவந்த மாணிக்க மணி போல்வதால் முருகப் பெருமானை “மணியே” என மொழிகின்றார். வள்ளிநாயகியைப் பெறும் பொருட்டு அவளிருந்த தினைப் புனத்தில் முருகன் வேங்கை மரமாய் நின்ற திறத்தைக் கந்தபுராணம், “அடிமுதல் மறைகளாக, ஓங்கிய நடுவணெல்லாம் உயர்சிவ நூலதாகப், பாங்கமர் கவடு முற்றும் பல்கலையாகத் தான்ஓர், வேங்கையின் உருவமாகி வேற்படை வீரனின்றான்” (வள்ளி. 75) என்றும் தணிகைப் புராணம், “உலைவறு மறைகளு மோங்கு நூல்களும், கலைகளும் முழுவதும் கதித்து வேர்முதல், இலைமுடி வாயுருவியைய ஆங்கதன், நிலை பெறு முயிரென நிமலன் நிற்றலும்” (களவுப். 199) என்றும் கூறுதலால், “தினைப் புனவல்லியை வேண்டி வளர் மறைவான் கணியே என நின்ற கண்ணே” என்று வள்ளற் பெருமான் பரவுகின்றார். நினைப்பவர் நெஞ்சில் தேன் சுரந்து இன்பம் செய்தலால் “என் உள்ளக் களி நறவே” என மொழிகின்றார். வாழ்த்துவாரையே யன்றி வைதாரையும் வலிய ஆட்கொள்ளும் வள்ளலாதலால், “பணியேன் எனினும் எனை வலிந்தாண்டு உன்பதந் தரவே தணிகைக்கு வாஎன ஓர்மொழி நல்குவையே” என்று நவில்கின்றார். நணி, ஈண்டு விரைவின் மேற்று, “ஊர் நணித் தந்தனை யுவகையாம் உறவே” (அகம். 254) என்றாற் போல.

     இதனால் தணிகைக்கு வருக என ஒரு சொல் அருளுமாறு முருகனிடம் முறையிட்டவாறாம்.

     (46)