43. திருவருட் பேற்று விழைவு
அஃதாவது திருவருளைப் பெறுதற்கண்
உண்டாகிய விருப்பம் என்பது. இதன் கண் முதல் இரண்டு
பாட்டின்கண், மயிலேறி வந்தருள்வதும், எளியேனை
இவ்வுலகிற் பிறப்பித்து இருள் நெறிக்கண் செலுத்தி
யருளுவதும் என்னையோ என வினவிய வள்ளற் பெருமான், ஏனை
எட்டுப் பாட்டுக்களில் என்னை நின் பணி புரிவார்
அடியார்க் கடிமை யாக்கி அருள்க; என்மேல் கடைக்கண்
நோக்கி யருள்க; நினது திருப்புகழ் பாடித்திரியும் பணியே
யருள்க; கதிர் வடிவேல் தேவே என்னும் திருமொழியே
ஓதுவேனாக்கி யருள்க; உன்னை வழுத்துகின்ற பெருந்
தவத்தோரை அடையுமாறு அருள்க; துன்பம் நீங்கிச் சுகம்
பெற அருள்க; ஏனைத் தேவரினும் உனக்கே எனக்கருளும் உரிமை
யுண்டு; உன்னுடைய முகமும், தோளும், தாளும், ஊர்தியும்,
வேற்படையும் துணையாதலால் எனக்கு எமபயம் இல்லை யென
வுரைக்கு மாற்றால் அருள் விழைவும், பெற்ற வழி யெய்தும்
பயனும் அந்தாதியாகத் தொடுத்துரைக்கின்றார்.
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய
விருத்தம்
460. உலகம் பரவும் பரஞ்சோதி
யுருவாம் குருவே யும்பரிடைக்
கலகம் தருசூர்க் கிளைகளைந்த
கதிர்வே லரசே கவின்தருசீர்த்
திலகம் தருவா ணுதற்பரையின்
செல்வப் புதல்வா திறலதனால்
இலகுங் கலப மயிற்பரிமேல்
ஏறும் பரிசென் னியம்புகவே.
உரை: உலகனைத்தும் சென்று பரவும் மேலான ஒளி யுருவாகிய குருவே, தேவர்கள் வாழும் உலகத்தில் பகை கொண்டு கலகம் விளைத்துப் போராடிய சூரவன்மாவின் கிளைஞர்களாகிய அசுரர்களை வேரொ டொழித்த ஒளி பொருந்திய வேற்படையேந்துகிற அருளரசே, அழகு தரும் சிறப்புடைய திலகமிட்ட ஒளிமிக்க நெற்றியையுடைய பரையாகிய சிவசத்தியின் செல்வ மகனே, மிக்க திறல் படைத்தவனாகவும், விளங்குகிற தோகையை யுடைய மயிலாகிய ஊர்தி மேல் இவர்ந்து வரும் கொள்கை யாதாம்? கூறியருள்க, எ. று.
எண்ணிறந்த உலகங்களுக்கு ஆங்காங்கே ஒளி பரப்பும் ஞாயிறும் திங்களும் இருப்பினும் அவற்றிற் கெல்லாம் மேலாம் ஒளி தந்து உயிர்களை உய்விக்கும் பேரொளி யுருவாய் இருள் நீங்கி இன்புறுவித்தல் விளங்க, “உலகம் பரவும் பரஞ்சோதி யுருவாம் குருவே” என உரைக்கின்றார். “அருவமும் உருவுமாகி அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு” (கந்தபு) எனக் கச்சியப்ப சிவாசாரியாரும், “மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன் றொருமுகம்” (முருகு) என நக்கீரனாரும் கூறுவன காண்க. இருள் நீக்கி இன்ப மெய்து வித்தல் பற்றிக் “குருவே” எனக் குறிக்கின்றார். கலகம் - போர்க் கலகம். சூர்க்கிளை-சூரவன்மாவின் கிளைஞர்களான அசுரர்கள். அசுரரொடு போர் செய்த போது முருகன் சிறப்புறக் கொண்ட படைவே ற்படையாதலால், அதனைக் “கதிர் வேல்” எனச் சிறப்பிக்கின்றார். கதிர்வேல் என்றது, அசுரரது உடலை மாய்த்து உயிரைப் பற்றி யிருந்த இருளையும் போக்கியது பற்றி என அறிக. திலகம் மகளிர் நெற்றிக்கு அழகும் மணமும் தருவது. “திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல்” (முருகு) எனச் சான்றோர் கூறுப. காண்பார் கண்ணையும் கருத்தையும் கவ்வும் அழகு கவின் எனப்படும்; வனைதலாற் பிறக்கும் அழகு வனப்பாதல் போல. பரன் என்னும் பெயர்க்குப் பெண்பால் பரை; சிவனுக்குப் பெண்பால் சிவை யாதல் போல. சிவன் பரனாகும் போது, சிவையாகிய உமை பரை யெனப்படுகிறாள். அதனால், “பரையின் செல்வப் புதல்வா” என்று செப்புகின்றார். திறல் - மிக்கவலிமை. பரி - விரைந்து செல்லும் ஊர்தி. திறல் மிக்கவனாயினும், மயிலாகிய பறவை சுமந்து விரைந்தோடு மளவுக்கு அமைந்தமரும் அருளுடைமை புலப்படுத்துகின்றாராதலால், “மயிற் பரிமேல் ஏறும் பரிசு என்? இயம்புக” என வினாவுகின்றார்.
இதனால் முருகப் பெருமான் திறலும் அருளும் வெளிப்படுத்தியவாறாம். (1)
|