463. ஆக்கும் தொழிலாற் களித்தானை
அடக்குந் தொழிலா லடக்கிப்பின்
காக்கும் தொழிலா லருள்புரிந்த
கருணைக் கடலே கடைநோக்கால்
நோக்கும் தொழிலோர் சிறிதுன்பால்
உளதேல் மாயா நொடிப்பெல்லாம்
போக்குந் தொழிலென் பாலுண்டாம்
இதற்கென் புரிவேன் புண்ணியனே.
உரை: புண்ணியப் பொருளாகிய பெருமானே, படைக்கும் தொழிலாற் செருக்கு மிக்க பிரமனைத் தீது புரிபவரை அடக்கும் தொழில் கொண்டு சிறையிட்டு அடக்கிப் பின்பு, காத்தற் றொழில் உடைமையால் அருள் செய்து சிறை விடுத்தருளிய கருணைக் கடலாகியவனே, எளியார் மேல் கடைக்கண் பார்வை வைத்தருளுகிற தொழிலுடைய வனாதலால் அதனைச் சிறிது என்பால் செய்வாயேல், உலக மாயையின் அழிதொழிலனைத்தையும் போக்கிக் கொள்ளும் செயல் எனக்கு உண்டாகும்; இது குறித்து யான் செய்வது யாது? கூறி யருள்க, எ. று.
படைத்தல், காத்தல், அழித்தல், அருளல் முதலிய தொழில் பலவும் உடையனாதலால், செருக் குற்றிருந்த பிரமதேவனைத் தலையிற் குட்டிச் சிறையிட்டதும், பின்னர் அவனைச் சிறையினின்றும் விடுவித்து முன்போல் தனக்குரிய நிலையில் இருத்தித் தொழில் புரிவித்ததும் நினது தலைமைக்கு ஒத்தனவாம் என்றற்கு, “ஆக்கும் தொழிலாற் களித்தானை அடக்கும் தொழிலால் அடக்கிப் பின் காக்கும் தொழிலால் அருள் புரிந்த கருணைக் கடலே” என்று போற்றுகின்றார். கடைக்கணித்து அருளுதல் என்ற அருட் செயல்வகை ஒன்று உண்டே; அதனால் என்னைக் கடைக்கணித்து நோக்கி யருள்வாயாயின், யான் ஞான வலிமை எய்தப் பெற்று உலக மாயை செய்யும் மயக்கச் செயல்களைப் போக்கிக் கொள்வேன் என்பாராய்க் “கடை நோக்கால் நோக்கும் தொழில் ஓர் சிறிது உன்பால் உளதேல் மாயா நொடிப் பெல்லாம் போக்கும் தொழில் என்பால் உண்டாம்” என்று தெரிவித்துக் கொள்ளுகின்றார். கடை நோக்கு - கடைக்கண்ணால் பார்த்தருளுதல். மாயா நொடிப்பு - மாயையின் அழிதொழிகள்; அறிவை மறைத்து மருள்வித்துக் குற்றம் புரிவித்தல். நொடித்தல் - அழித்தல். “நோக்காது நோக்கி நொடித்தன்றே” (சிவஞான போதம்) என்பதற்குச் சிவஞான முனிவர் உரைக்கும் பொருள் காண்க. மாயையைக் கலக்கிக் காரியப்படுத்துவது அவனது அருட் சத்தியாகலின், அம்மாயா காரிய நொடிப்பை யறிந்து காத்துக் கொள்வது அவனது அருளாலன்றி யாகாமை பற்றி, யான் செய்யக் கூடியது யாதுமில்லை என்பார், “இதற்கு என் புரிவேன் புண்ணியனே” என்று புகல்கின்றார்.
இதனால், முருகப் பெருமான் கடைக்கணித்து நோக்குவராயின், திருவருளால் மாயையின் சேட்டையினின்றும் நம்மைக் காத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தவாறாம். (4)
|