464. புரிவேன் விரதம் தவம்தானம்
புரியா தொழியேன் புண்ணியமே
பரிவேன் பாவம் பரிவேனிப்
பரிசா லொன்றும் பயன்காணேன்
திரிவே னினது புகழ்பாடிச்
சிறியே னிதனைத் தீர்வேனேல்
எரிவே னெரிவாய் நரகத்தே
இருப்பே னிளைப்பேன் விளைப்பேனே.
உரை: விரதங்களை மேற்கொள்வதும், தவமும் தானமுமாகிய வற்றைச் செய்வதும், புண்ணியச் செயல்களை விரும்புவதும், பாவச் செயல்களைக் கண்டு வருந்துவதும் செய்பவனே யெனினும், இவற்றால் யான் ஒரு பயனும் கண்டிலேன்; ஆனால் சிறியவனாகிய யான் நின்னுடைய திருப்புகழையே பாடித் திரிவேன்; இதனைக் கைவிட்டால் தீயில் வீழ்ந்தெரிந்து, எரிமிக்க நரகத்தே கிடந்து மெலிந்து பாவமே செய்தொழிவேன், எ. று.
ஞானப் பேறு குறித்து மேற்கொள்ளும் கொள்கைகள் விரதம் எனப்படும்; அதனால் விரதங்களை யான் மேற்கொள்வ துண்டென்பார், “புரிவேன் விரதம்” என்கின்றார். உணவிலும் உடையிலும் நடையிலும் செயல்வகையிலும் சில கட்டுப்பாடுகளை அமைத்துக் கொள்ளும் உருவில் விரதங்கள் அமைவன என அறிக. தவமாவது, உற்ற நோயைப் பொறுத்துக் கொள்வதும், பிற வுயிர்கட்குக் தீங்கு செய்யாமையுமாகும். தானம் என்பது, அரிதின் முயன்று பெற்ற பொருளை யுலக நலங் கருதிச் செலவிடுதல். “தானமாவது அறநெறியான் வந்த பொருளைத் தக்கார்க்கு உவகையோடு கொடுத்தல்” எனவும், “தவமாவது மனம் பொறி வழிப் போகாமல் நிற்றற் பொருட்டு விரதங்களால் உண்டி சுருக்கல் முதலாயின” எனவும் பரிமேலழகர் (குறள்உரை) கூறுவர். விரத ஞானங்களாற் பயனில்லை என்பர் பெரியோர்; “விரதங்களால் வாடி ஞானம் என்னாவது” (வலஞ்சுழி) என ஞானசம்பந்தரும், “உரித்தன் றுனக்கிவ் வுடலிவ் வுண்மை யுரைத்தேன் விரத மெல்லாம் தரித்தும் தவ முயன்றும் வாழா நெஞ்சே” (நெய்த்தானம்) என நாவுக்கரசரும் உரைப்பது காண்க. இப்பெரியோர்களால் மறுக்கப்படும் விரதங்கள் எவ்வாறு தோன்றின வெனின், வேதியர்களே சாத்திரம் காட்டிப் புகுத்தின ரென்பாராய், “விரதமே பரமாக வேதியரும், சரதமாகவே சாத்திரம் காட்டினர்” (போற்றித்) என்று மாணிக்க வாசகர் மொழிகின்றார். புண்ணியச் செயல் கண்டு மகிழ்வதும், பாவ வினைகண்டு வருந்துவதும் நற்செயல்களாயினும், அவற்றாலும் ஒருபயன் காண்கிலேன் என உரைப்பாராய்த் “தவம் தானம் புரியா தொழியேன்” என்றும், “புண்ணியமே பரிவேன் பாவம் பரிவேன் இப்பரிசால் ஒன்றும் பயன் காணேன்” என்று வள்ளற் பெருமான் வாய்விட்டுச் சொல்லுகின்றார். பரிதல் - ஆதரித்தல், இரங்குதல் எனப் பலபொருள் தருவது. “எம்மை இகழ்ந்த வினைப் பயத்தால் உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர் கொல் என்று பரிவதூஉம் சான்றோர் கடன்” (நாலடி) என வழங்குவது காண்க. புகழ்பாடிப் பெறலாகும் இன்பத்தைக் கைவிட்டு இவ்வுலகத் துன்பத்திற் கிடந்து வருந்துவதை விடத் தீயில் வீழ்ந்திறந்து எரிவாய் நரகம் புகுந்து மெலிந்தொழிவேன் என்பார், “இதனைத் தீர்வேனேல் எரிவேன் எரிவாய் நரகத்தே இருப்பேன் இளைப்பேன்” என்றும், மீண்டு வரினும் பாவமே செய்து மறுபடியும் அந்நகரமே புகுவேன் என்றற்கு “விளைப்பேனே” என்றும் கூறுகின்றார். இனி, தீர்வேனேல் எரிவாய் நரகத்தே எரிவேன்; நரகம் புகாது இவ் உலகிலேயே பிறந்தும் இறந்தும் இருப்பேனாயின, மனம் சோர்ந்து மேன் மேலும் பாவமே விளைத்துக் கொண்டிருப்பேன் என்று கூறினும் அமையும் என்க. தீர்தல்- கைவிடுதல்; “தீர்தலும் தீர்த்தலும் விடற் பொருட்டாகும்” (உரி) என்பது தொல்காப்பியம்.
இதனால், விரதம் தவம் தானங்களை மேற் கொள்வதிலும் முருகன் திருப் புகழைப் பாடித் திரிவது நலமென வற்புறுத்தியவாறாம். (5)
|