465. விளைப்பேன் பவமே யடிச்சிறியேன்
வினையாள் விளையும் வினைப்போகம்
திளைப்பே னெனினும் கதிர்வடிவேல்
தேவே யென்னும் திருமொழியால்
இளைப்பே னலனிங் கியம்புகிற்பேன்
எனக்கென் குறையுண் டெமதூதன்
வளைப்பே னெனவந் திடிலவனை
மடிப்பேன் கருணை வலத்தாலே.
உரை: கீழ்ப்பட்ட சிறுமை யுடையவனாதலால் எனக்கே மேலும் பல பிறவிகளை எய்துவித்துக் கொள்வே னென்றாலும், யான் செய்யும் வினைகளால் உண்டாகும் பயன்களை நுகர்ந்து வருந்துவே னென்றாலும், ஒளி திகழும் வடிவேலை யேந்தும் முருகனாகிய தேவனே என்றுரைக்கும் திருமொழியையே ஓதிப், பிறவிகளாலும் வினை நுகர்ச்சிகளாலும் இங்கே மனம் சோர்வடைய மாட்டேன்; எனக்கு என்ன குறை யுளதாம்; எமனுடைய தூதர்கள் தனித்தனி வந்து உன்னுயிரை வளைத்துக் கொண்டு செல்வேன் என்பானாயினும், யான் அவனை, முருகனது திருவருள் வலிமை யுற்று வென்று மாய்ப்பேன் என அறிக, எ. று.
அடிச் சிறியேன், அடி நாயேன் என்பது போல் கீழ்மை மிகுதி குறித்து நின்றது. “அடி நாயேன் அரற்று கின்றேன் உடையானே” (குழைத்த) என்று திருவாசகம் உரைப்பது காண்க. சிறுமை - அறிவு ஆற்றல் ஒழுக்கம் முதலியவற்றால் மிக்க குறைபாடுடைமை. பேருணர்வுடைய பெருமக்களாலும் விலக்குதற்கரிய பிறப்பு இறப்புக்களைச் சிறியோர் பெருக்குவ ரென்பது பற்றி, “விளைப்பேன் பவமே அடிச் சிறியேன்” எனவும், வினைகளால் விளையும் சுக துக்கங்களை நுகர்ந்தே கழித்தல் வேண்டுமாதலால், “வினையால் விளையும் வினைப் போகம் திளைப்பேன்” எனவும் கூறுகின்றார். நல்வினைக்கு இன்பமும் தீவினைக்குத் துன்பமும் போகமாதலால், “வினைப் போகம்” எனப்படுகின்றன. பிறவி பலவாகிய போது உயிர்க்கு இளைப்புண்டாதல் இயல்பாதல் கொண்டு, “எனினும் இளைப்பே னலன் இங்கு” என்கின்றார். “எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்” (சிவபு) என மணிவாசகர் மொழிவது காண்க. அப்பிறப்புக்களில் பற்றும் பற்றுப் பெறாமையால் மணிவாசகப் பெருமான் “இளைத்தேன்” என்று இயம்புகின்றார்; யானோ, “கதிர் வடிவேல் தேவே” என்ற பற்றினைப் பெற்றுளேனாதலால், இளைக்க மாட்டேன் என்பாராய்க் “கதிர் வடிவேல் தேவே யென்னும் திருமொழியால் இளைப்பேனலன் இங்கு இயம்புகின்றேன்; எனக்குக் குறை என்” என எடுத்து மொழிகின்றார். “பற்றும் பற்றாங்கது பற்றி நற்றாங் கதி அடைவோம் எனிற் கெடுவீர் ஓடி வம்மின்” (உயிருண்) எனத் திருவாசகம் ஓதுவது காண்க. இத் திருவாசகத்தில் “கெடுவீர்” என்பது கெடல் வேண்டா என்ற எதிர்மறைக் குறிப்புப் பொருளில் வந்துளது. “எமதூதன் வளைப்பேன் என வந்திடில்” என்பது, எம தூதன் வளைப்பேன் என நினைக்கவோ, சொல்லவோ, வரவோ மாட்டான், திருவருள் வலிமை எய்தி யிருப்பதை அவன் அறிவன் என்பது கருத்து.
இதனால், முருகன் திருப்பெயரைத் துணையாகக் கொள்வார்க்கு எமபயம் இல்லை என்று தெரிவித்தவாறாம். (6)
|