466.

    வலத்தால் வடிவேல் கரத்தேந்தும்
        மணியே நின்னை வழுத்துகின்ற
    நலத்தால் உயர்ந்த பெருந்தவர்பால்
        நண்ணும் பரிசு நல்கினையேல்
    தலத்தால் உயர்ந்த வானவரும்
        தமியேற் கிணையோ சடமான
    மலத்தால் வருந்தாப் பெருவாழ்வால்
        மகிழ்வேன் இன்பம் வளர்வேனே.

உரை:

     வெற்றி மிகுதியால் வடிவேலைக் கையில் ஏந்துகின்ற மாணிக்க மணி போன்ற முருகப் பெருமானே, உன்னை வாழ்த்தி வழிபடுகின்ற நற்பண்பால் உயர்வு பெற்ற பெரிய தவமுடை பெருமக்களைச் சார்ந்தொழுகும் நற்பான்மையை எனக்கு அருளுவாயாயின், வாழுங்கால் மேன்மை கொண்ட தேவர்களும் தமியேனுக்கு நிகராகார்; சடமாகிய மலத்தால் பிணிப்புண்டு வருந்தாத பெருவாழ்வு பெற்று மகிழ்வதுடன் சிவானந்தம் மிகப் பெறுவேன், எ. று.

     வலம் - வெற்றி. எங்கும் எப்போதும் வெற்றியே பெற்று இலங்குவதால் கையில் ஏந்தப்படும் சிறப்பு விளங்க, “வலத்தால் வடிவேல் கரத்தேந்தும் மணியே” என்று புகழ்கின்றார். பொருவார் இல்லாமையால் வடித்த பொலிவு குன்றாமை தோன்ற “வடிவேல்” எனப்படுகிறது. சிவந்த மாணிக்க மணி போறலின், “மணியே” எனப் போற்றுகின்றார். முருகனை நாளும் வணங்கி வாழ்த்தி வழி படுவதே பெருந்தவப்பயன் ஆதலால், “நின்னை வழுத்துகின்ற நலத்தால் உயர்ந்த பெருந்தவர்” என அடியார்களைப் பாராட்டுகின்றார். அடியார் கூட்டம் ஞானப்பேரொளியிலேயே சார்ந்தோர்களை நிறுத்தி உய்தி பெறுவிப்பதை யெண்ணித் தமக்கும் அச்சார்பு எய்த வேண்டு மென்பதற்காகப் “பொருந்தவர் பால் நண்ணும் பரிசு நல்கினையேல்” எனவும், வானுலகத் தேவர்கட்கு அச்சூழ்நிலை யில்லாமை பற்றி, “வானவரும் தமியேற்கு இணையோ” எனவும் இயம்புகின்றார். மண்ணுலகினும் உயர்ந்தது வானவர் வாழும் விண்ணுலக மென்பது பற்றித் “தலத்தால் உயர்ந்த வானவர்” என்று கூறுகின்றார். தலம், ஈண்டு உலக மென்னும் பொருட்டு. சிவமும் உயிர்த் தொகையு மொழியப் பிறவனைத்தும் அறிவில்லாத சடப் பொருளாதலால், “சடமான மலத்தால்” என்றும், உயிரறிவை மறைத்து இன்பத்துக்கேயுரிய உயிரைத் தீய நினைவு சொற் செயல்களால் துன்பத்துக்கு உள்ளாக்குவதால், “மலத்தால் வருந்தாப் பெருவாழ்வால் மகிழ்வேன்” என்றும், மல நீக்கத்தோடு சிவானந்தப் பேறு வேறுண்மை தோன்ற, “இன்பம் வளர் வேனே” என்றும் இயம்புகிறார்.

     இதனால், அடியார் உறவால் உளவாகும் பெரும் பயன் தெரிவித்தவாறாம்.

     (7)