468. சுகமே யடியார் உளத்தோங்கும்
சுடரே யழியாத் துணையேயென்
அகமே புகுந்த அருள்தேவே
அருமா மணியே ஆரமுதே
இகமே பரத்து முனக்கன்றி
எத்தே வருக்கும் எமக்கருள
முகமே திலையெம் பெருமானே
நினக்குண் டாறு முகமலரே.
உரை: இன்பமே யுருவாயவனே, அடியார் மனத்தின்கண் உயர்ந்தோங்கி யொளிரும் ஞான வொளியே, என்றும் கெடாத துணை புரிபவனே, எளிய எனது மனத்தினுட் புகுந்தருள் புரியும் தெய்வமே, அரிய பெரிய மாணிக்க மணியே, பெறற்கரிய அமுதம் போல்பவனே, இம்மை யிவ்வுலகத்திலும் மறுமை யவ்வுலகத்திலும் எம் போல்வார்க்கு அருள் புரிதற்குள்ள வுரிமை உனக்கன்றி எத்தகைய தேவர்களுக்கும் இல்லையன்றோ? எம் பெருமானே, உனக்குத் தானே உயிரினங்கட்கு ஆறுதலை வழங்க ஆறுமுகங்கள் உள்ளன, எ. று.
இன்ப வுருவுடையவனை இன்பமே என்னும் வழக்குப் பற்றிச் “சுகமே” எனக் குறிக்கின்றார். முருகன் திருவடியை நெஞ்சிற் கொண்ட அன்பர் உள்ளத்தில் ஞானச் சுடராய் நிற்பது பற்றி, “அடியார் உளத் தோங்கும் சுடரே” என்றும், ஈறிலாதவனாதல் பற்றி, “அழியாத துணையே” என்றும் கூறுகின்றார். பெரியோர்களும், “ஞானத்தின் ஒண் சுடராய் நின்றார் போலும்” (சாய்க்) எனவும், “ஈறிலாதவன் ஈசன் ஒருவனே” எனவும் ஓதுவது காண்க. நினைப்பார் நினைவினுள் தோன்றி அருள் வழங்கும் அருமை யுடைமை பற்றி, “என் அகமே புகுந்த அருள் தேவே” என்று பாடுகின்றார். “எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள் அவ்வுருவாய்த் தோன்றி அருள் கொடுப்பான்” (ஞானவுலா) என்று சேரமான் பெருமாள் உரைப்பது காண்க. மணியே அமுதே என்பன ஆர்வ மொழிகள். இகபரம் - இவ்வுலகம் மேலுலகம். எங்குள்ள தேவர்கட்கும் எத்தகைய சிறப்பிருப்பினும் நினக்கு அன்பராகிய எங்கட்கு முன் தோன்றி அருள் செய்தற்கு ஏற்ற மானமோ திறமோ இல்லை யென்பார், “இகபரத்தும் உனக்கன்றி எத்தேவருக்கும் எமக்கு அருள முகம் ஏது?” என வினவி, “இலை” என்று வள்ளலார் தாமே விடை தருகின்றார். முகம் ஈண்டுத் தகுதி, உரிமை, பெருமை முதலிய பல பொருள் குறித்து நிற்கிறது. தேவர்கட்கு முகமில்லையே யன்றிப் பெருமானாகிய உனக்கு மலர் போல ஆறுமுகங்கள் உள்ளன; அவற்றாற் செய்யலாகாத அருளில்லை என்பாராய், “எம்பெருமானே நினக்கு உண்டு ஆறு முகமலரே” என்று உரைத்து மகிழ்கின்றார்.
இதனால், முருகப்பெருமான் அடியார்க்கு அருள் நல்கும் சிறப்புப் பிற தேவர்கள் எவருக்கும் இல்லை யென்பது வற்புறுத்தியவாறாம். (9)
|