469.

    ஆறு முகமும் திணிதோளீ
        ராறும் கருணை யடித்துணையும்
    வீறு மயிலும் தனிக்கடவுள்
        வேலும் துணையுண் டெமக்கிங்கே
    சீறும் பிணியும் கொடுங்கோளும்
        தீய வினையும் செறியாவே
    நாறும் பகட்டா னதிகாரம்
        நடவா துலகம் பரவுறுமே.

உரை:

     ஆறுமுகமும், திண்ணிய தோள்கள் பன்னிரண்டும், அருள் நல்கும் திருவடிகள் இரண்டும், சிறப்புடைய மயிலூர்தியும், தனிச் சிறப்பும் கடவுட் டன்மையும் கொண்ட வேற்படையும் எமக்குத் துணையாக அமைந்திருக்கும்போது இவ்வுலகில் வருத்துகின்ற நோய்களும், கிரகங்கள் செய்யும் தீங்குகளும், தீவினைப்பயன்களும் வந்தடையா; அதனால், பிண நாற்றம் தரும் எருமை வாகன முடைய எமனது அதிகாரம் தானும் பரந்துள்ள உலகத்தில் செல்லாது, காண், எ. று.

     திணி தோள் - வலிமையால் திண்மையுற்ற தோள்கள். உயிர்த் தொகைகட்கு அருள் புரிதல் வேண்டிச் செல்லுவதும், அருள் வேண்டி அடைந்தாரைத் தாங்குவதுமாகிய அருள் நிலையம் என்பது விளங்கக் “கருணை அடித்துணை” என்று பாராட்டுகின்றார். “உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்” என்பது திருமுருகாற்றுப்படை. துணை - இரண்டு. முருகப் பெருமானைத் தாங்கிச் செல்லும் தனிச் சிறப்புடைமை தோன்ற, “வீறு மயில்” என விளம்புகிறார். குறித்தார் மேல் தவறாமற் பாய்ந்து உடலை மாய்த்து உயிர்க்கு உறுதி நல்குவது பற்றித் “தனிக் கடவுள்வேல்” எனப் புகழ்கின்றார். அச்சுறுத்தும் இயல்பின வாதலாற் பிணி வகைகளைச் “சீறும் பிணி” யெனவும், நேரிதிற் செல்வாரையும் மனம் கோணுவித்துத் தீங்குறுவித்தலால் தீக்கோள்களைக் “கொடுங் கோள்” எனவும், துன்பம் விளைவிக்கும் வினைகளைத் “தீய வினை” எனவும் கூறுகின்றார். உயிரைக் கவர்ந்து கொண்டு உடம்பை முடை நாற்ற மெய்தச் செய்தலால் எமனை, “நாறும் பகட்டான்” என்று பழிக்கின்றார். பகடு, ஈண்டு எருமைக் கடா. அதிகாரம் - முறைமை. பரவுறும் உலகம் என மாற்றிப் பரத்தலைப் பொருந்திய உலகம் எனப் பொருள் உரைக்க. பரவு - பரத்தல். உலகம் என்பதன் ஈற்றில் கண்ணுருபு தொக்கது. “ஐயும் கண்ணும் அல்லாப் பொருள் வயின், மெய்யுருபு தொகா இறுதியான” (சொல்) எனத் தொல்காப்பியம் கூறுவது காண்க.

     இதனால் முருகனுடைய முகமும் தோளும் திருவடியும் படையும் மயிலும் துணையாயிருத்தலால் எம பயமும் பிணியச்சமும் பிறவும் இல்லையாமென அறிவுறுத்தவாறாம்.

     (10)