47. நல்காத வீனர்தம் பாற்சென் றிரந்து
நவைப்படுதல்
மல்காத வண்ண மருள்செய் கண்டாய்
மயில் வாகனனே
பல்காதல் நீக்கிய நல்லோர்க் கருளும்
பரஞ் சுடரே
அல்காத வண்மைத் தணிகா சலத்தில்
அமர்ந்தவனே.
உரை: சுருங்காத வளமை பொருந்திய தணிகை மலையில் வீற்றிருப்பவனே, புலன்கள் மேற் செல்லும் பலவகை ஆசைகளை யறுத்த நல்லோர்க்கருளும் பரஞ்சுடரே, மயிலை ஊர்தியாக வுடைய முருகப் பெருமானே, ஈயாத கீழ் மக்களிடம் சென்று ஒன்று வேண்டி இரந்து வருத்தப்படும் குறை எனக்கு உண்டாகா வண்ணம் அருள் புரிவாயாக, எ. று.
கண்டாய், முன்னிலை யசை. இரப்பார்க்கு ஈயாத பண்பு கீழ் மக்கள் பால் இருப்பதாகலின், அவர்களை “நல்காத ஈனர்” என நவில்கின்றார். “இலன் என்னும் எவ்வம் உரையாமை யீதல் குலனுடையான் கண்ணே யுள” (குறள்) என்றலின், இலன் என்று சொல்லிக் கரப்பவர் ஈனர் எனப்பட்டனர் என்றுமாம். இரப்பதே உள்ளத்தை யுருக்கும் கொடுமை யுடையதாக, மறுக்கப்பட்டவழி அக்கொடுமையால் விளையும் துன்பம் பன்மடங்கு பெரிதாகலின், “இரந்து நவைப்படுதல் மல்காத வண்ணம் அருள்செய்” என வேண்டுகின்றார். எனவே, இன்மையுற்று இரவா நிலையை அருள்க என்பதாம். இது நினைந்தே, திருஞானசம்பந்தர், “தொண்டர் வந்து வணங்கி மாமலர் தூவி நின்கழ லேத்துவாரவர், உண்டியால் வருந்த இரங்காத தென்கொலாம்” (ஆமாத்-) என்று ஈசன் பால் முறையிடுகின்றார். நவை - துன்பம், மல்குதல் - மிகுதல். புலன்கள் ஐந்தாதலால் அவற்றால் உளவாகும் ஆசைகளைப் “பல்காதல்” என்றும், அவற்றை அறுக்காவிடத்து ஒருவர் நல்லராதல் அரிதாகலின், “பல் காதல் நீக்கிய நல்லோர்” என்றும், அந்த நன்மக்கள் வேண்டுவது ஞானவொளி யாதல் பற்றி, ஞான மூர்த்தியாய்க் காட்சி தரும் நலம் நினைந்து, “நல்லோர்க்கருளும் பரஞ்சுடரே” என்றும் பரவுகின்றார். பெருகும் வளமுடைமை தோன்ற, “அல்காத வண்மைத் தணிகாசலம்” என்று சிறப்பிக்கின்றார். அல்குதல் - சுருங்குதல்.
இதனால், ஈயாத வீணரை இரந்து எய்தும் துன்பம் தமக்கு எய்தா வகை அருளுக என முறையிட்டவாறாம். (47)
|