44. செல்வச் சீர்த்தி மாலை

        அஃதாவது முருகப் பெருமானுடைய செல்வச் சிறப்பு மிக்க புகழைப் பாமாலையாகப் புனைந்து புகழ்வதாகும். இதன்கட் பாட்டுத் தோறும் “தணிகாசலமாம் தலத் தமர்ந்த சைவ மணியே சண்முகனே” என்ற ஈறு மகுடமாய் விளக்க முறுகிறது. முருகனுடைய முதன்மையும், மூவர்க்கருளும் பெருமையும், தேவ மங்கையர்க்கு மங்கல வாழ்வளித்த மாண்பும், உலகனைத்தும் தானேயாய்க் காட்சி யளித்த தகைமையும், வள்ளற் பெருமான் உற்ற வாழ்க்கைத் துன்பங்களும் இனிது தோன்ற எடுத்துரைக்கப்படுகின்றன. “சீர்த்தி மிகு புகழ்” என்பர் தொல்காப்பியர்.

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

470.

    அடியார்க் கெளிய ரெனுமுக்கண்
            ஐயர் தமக்கு முலகீன்ற
        அம்மை தனக்குந் திருவாய்முத்
            தளித்துக் களிக்கு மருமருந்தே
    கடியார் கடப்ப மலர்மலர்ந்த
            கருணைப் பொருப்பே கற்பகமே
       கண்ணுள் மணியே யன்பர்மனக்
            கமலம் விரிக்கும் கதிர்மணியே
    படியார் வளிவான் தீமுதலைம்
            பகுதி யாய பரம்பொருளே
        பகர்தற் கரிய மெய்ஞ்ஞானப்
            பாகே யசுரர் படைமுழுதும்
    தடிவா யென்னச் சுரர்வேண்டத்
            தடிந்த வேற்கைத் தனிமுதலே
        தணிகா சலமாம் தலத்தமர்ந்த
            சைவ மணியே சண்முகனே.

உரை:

     தணிகைமலை யெனப்படும் பதியின்கண் வீற்றிருந் தருளுகிற சைவத் தலைமணியே, சண்முகப் பெருமானே, அடியார்க் கெளியர் எனப்படும் மூன்று கண்களையுடைய தலைவரான சிவபெருமானுக்கும் உலகை ஈன்றளிக்கும் அன்னையாகிய உமா தேவிக்கும் அழகிய வாயால் முத்தம் தந்து மகிழ்விக்கும் பெறற் கரிய தேவாமிர்தமே, மணம் பொருந்திய கடம்பு மலரால் தொடுக்கப்பட்ட மாலை மலர் மலர்ந்து விளங்கும் கருணை யுருவாகிய மலையே, கற்பகமே, கண்ணுள் திகழும் மணி போல்பவனே, அன்பர்களின் மனமாகிய தாமரை மலரை மலர்விக்கும் ஒளிமிக்க ஞானமணியே, நிலம் நீர் தீ காற்று விண்ணாகிய ஐம்பெரும் பூதப் பகுதியாகிய பரம்பொருளே, சொல்லுதற்கரிய மெய்ஞ்ஞானமாகி யபாகே, அசுரர்களாகிய பகைவர் படைத்திரளை வீழ்த்தியருள்க எனத் தேவர்கள் வேண்டிக் கொண்டதற்கு இசைந்து வேரறக் கெடுத்தருளிய வேற்படையை யுடைய தனி முதற் பொருளே, எமக்கு அருள் புரிக, எ. று.

     அடியராயினார் வேண்டிய பொழுதே வேண்டியது வேண்டியாங்கு விரைந்து வந்து எளியனாய் அருள் செய்வது பற்றிச் சிவனை அடியார்க் கெளியர் எனப் பெரியோர் கூறுவர். “எளியவர் அடியர்க் கென்றும் இன்னம்பர் ஈசனாரே” (நேரிசை) எனத் திருநாவுக்கரசர் கூறுவதும், கொற்றவன் குடி உமாபதி சிவனார்க்கு வந்த சீட்டுக் கவியும், “அடியார்க் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங் குடியார்க் கெழுதிய கைச் சீட்டு” என்பதும் இங்கே நினைவு கூரத் தக்கன. ஐயர் - தலைவர். “கருதரிய கடலாடை யுலகுபல அண்டம் கருப்பமாய்ப் பெற்ற கன்னி” எனச் சிவப்பிரகாசர் முதலியோர் உரைத்தலால், உமையம்மையை, “உலகீன்ற அம்மை” எனவுரைக்கின்றார். சிவபிரானுக்கும் உமாதேவிக்கும் சிறு குழவியாய் இருந்து இன்புறுத்திய நலம் விளங்க, முருகனை, இருவர்க்கும் “திருவாய் முத்து அளித்துக் களிக்கும் அருமருந்தே” என்று கூறுகின்றார். காதலர் வாய் முத்தமே, “பாலொடு தேன் கலந்தற்று” (குறள்) என்பதாயின், முருகனது முத்தத்தை “அருமருந்து” என்பதில் வியப்பேது? மருந்து, தேவர்கள் கடல் கடைந்து பெற்றெடுத் துண்ட அமுதம்; சாதலை நீக்கும் மருந்தாதல் பற்றித் தேவாமுதம் மருந்து எனப்படுவது மரபு. கடி - மணம். கடம்பு, மலை நாட்டில் வளர்ந்து நிற்கும் நறுமணப் பூ மரமாதலால், “கடப்ப மலர் மலர்ந்த கருணைப்பொருப்பே” எனச் சிறப்பிக்கின்றார். கற்பகம் - தேவருலகத்துச் சிறப்புடைய மரம். உலகியல் தாமரை மலர், சூரியவொளியால் இதழ் விரிந்து விளங்குவது போல, அன்பர் மனத்தாமரை முருகனது ஞானக் கதிரொளியால் மலர்ந்து விரிவது தோன்ற, “அன்பர் மனக்கமலம் விரிக்கும் கதிரொளியே” எனப் புகழ்கின்றார். நிலம் முதலிய ஐம்பெரும் பூதங்களும் இறைவன் வடிவ மென்று நூல்கள் கூறுதலால் “படியார் வளிவான் தீ முதல் ஐம்பகுதியாய பரம்பொருளே” எனப் பகர்கின்றார். முதல் என்றதனால், நீராகிய பகுதி வருவித்துக் கொள்ளப்பட்டது. செய்யுளாகலின், இப்பகுதியைந்தும் முறை மாறியுள்ளன. ஒன்றிலிருந்து தோன்றுவது விகுதியெனவும், ஒன்றினின்றும் தோன்றாதது பகுதி யென்றும் கொள்ளும் முறைமை பற்றி, இவை யைந்தும் தனி முதல்க ளெனக் காட்டற்கு “ஐம்பகுதி” எனக் குறிக்கின்றார். விண்ணிலிருந்து காற்றும், அக்காற்றிலிருந்து தீயும், அதனினின்று நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றின என்பதாயின், காற்றுத் தீ முதலியன ஒன்றிற் கொன்று பகுதியும் விகுதியுமாய் மாறுபடுவது கண்டே வள்ளலார், “ஐம்பகுதி” என உரைக்கின்றார் என்று அறிக. படி - நிலம். “தடவரைகள் ஏழுமாய்க் காற்றாய்த் தீயாய்த் தண் விசும்பாய்த் தண்விசும்பி னுச்சியாகிக், கடல் வலயஞ் சூழ்ந்த தொரு ஞாலமாகிக், காண்கின்ற கதிரவனும் மதியுமாகிக் குடமுழுவச் சதி வழியே அனல் கையேந்திக் கூத்தாட வல்ல குழகனாகிப் படவர வொன்றது வாட்டிப் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்தவாறே” (பாசூர்) எனத் திருநாவுக்கரசரும், “தானாகித் தானல்ல தொன்றுமில்லாத் தன்மையனாய் எவ்வெவைக்கும் தலைவனாகி, வானாகி வளியனலாய் நீருமாகி, மலர் தலைய வுலகாகி மற்றுமாகித், தேனாகித் தேனினறுஞ் சுவையதாகித், தீஞ்சுவையின் பயனாகித் தேடுகின்ற, நானாகி என்னிறையாய் நின்றோய் நின்னை நாயடியேன் எவ்வாறு நவிற்றுமாறே” (மகாதேவ. 69) என வள்ளலாரும் கூறுவன ஈண்டு ஒப்பு நோக்கிக் கொள்க. இங்ஙனம் பகுதிகள் பலவாய் அவற்றின் வேறாய் மேலாய் விளங்குதலால் “பகுதியாய பரம்பொருளே” என்று கூறுகின்றார். மெய்யுணர்வாய், உணர்வார் உணர்வுக்கு இனிய பாகு போல் இன்பம் தருவதாய் விளங்கினும், சொல்லுதற் கரியதாகலின், “பகர்தற் கரிய மெய்ஞ்ஞானப் பாகே” எனவும், முருகனாய்த் தோன்றி நின்ற போது அசுரர் செய்யும் அல்லலை எடுத்தோதி அவர்களை எங்கும் இல்லாதவாறு போக்கி யருள்க என்ற தேவர்கள் பொருட்டு வேற்படை கொண்டு அமர் புரிந்து அருளிய நலத்தை நினைந்து, “அசுரர் படை முழுதும் தடிவாய் என்னச்சுரர் வேண்டத் தடிந்த வேற்கைத் தனி முதலே” என்று இயம்புகிறார். தனி நின்று தடிந்தருளிய முதல்வனாதல் பற்றித் “தனி முதலே” எனப் போற்றுகின்றார். சிவநெறி பரவும் தலைவனாதல் பற்றிச் “சைவமணி” என்று புகழ்கின்றார்.

     இதனால், திருவாய் முத்தமளிக்கும் மருந்தாய், கருணைப் பொருப்பாய், கற்பகமாய், கண்மணியாய், கதிரொளியாய், பரம்பொருளாய், மெய்ஞ்ஞானப் பாகாய், வேற்கைத் தனி முதலாய், சைவமணியாய் விளங்கும் சண்முகனே எமக்கருள் புரிக என முருகனது மிகு புகழை விளம்பியவாறாம்.

     (1)