473.

    முன்னைப் பொருட்கு முதற்பொருளே
            முடியா தோங்கும் முதுமறையே
        முக்கட் கரும்பீன் றெடுத்தமுழு
            முத்தே முதிர்ந்த முக்கனியே
    பொன்னைப் புயங்கொண் டவன்போற்றும்
            பொன்னே புனித பூரணமே
        போத மணக்கும் புதுமலரே
            புலவர் எவரும் புகும்பதியே
    மின்னைப் பொருவும் உலகமயல்
            வெறுத்தோர் உள்ள விளக்கொளியே
        மேலும் கீழும் நடுவுமென
            விளங்கி நிறைந்த மெய்த்தேவே
    தன்னைப் பொருவும் சிவபோகம்
            தன்னை யுடையோர் தம்பயனே
        தணிகா சலமாம் தலத்தமர்ந்த
            சைவ மணியே சண்முகனே.

உரை:

     தணிகை மலையாகிய பதியில் எழுந்தருளும் சைவத் தலைமணி யாகிய சண்முகப் பெருமானே, பழம்பொருட் கெல்லாம் பழையதாகிய முதற் பொருளே, முடிவின்றி ஓங்குகின்ற முதுமையான மறைப் பொருளே, மூன்று கண்களை யுடைய கரும்பு போன்ற சிவபெருமான் பெற்றெடுத்த முத்தமே, மிகக் கனிந்த முக்கனி போன்றவனே, திருமகளைத் தோளிலே யுடைய திருமால் வணங்கித் துதிக்கின்ற பொன்னே, தூய்மையின் முற்றிய நிறைவே, ஞானமணம் கமழும் புதுப் பூவே, தேவர்கள் அனைவரும் வந்தடையும் புகலிடமே, மின்னலைப் போல் தோன்றிக் கெடும் உலகியல் மயக்கத்தை விரும்பாமல் வெறுத்துத் துறந்த பெரியோர் உள்ளத்தில் திகழும் விளக்கொளியே, மேல் என்றும் கீழ் என்றும் நடு வென்றும் விளங்கத் தோன்றுகின்ற மெய்ம்மைத் தெய்வமே, தன்னைப் போலச் சிவயோகத்தை யுடையவர் பெறும் பயனாய் உள்ளவனே, அருள் புரிக, எ. று.

     “முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருள்” (திருவெம்பாவை) எனச் சான்றோர் புகழ்வதால் வள்ளலாரும், “முன்னைப் பொருட்கு முதற் பொருளே” என்று மொழிகின்றார். முன்னைப் பழம் பொருளென்பதும், முன்னையதாகிய முதற் பொருளையே குறிப்பதால், “முதற் பொருள்” என உரைத்தார். முடிவின்மை பற்றி, “முடியாது ஓங்கும்” என்றும் குறிக்கின்றார். முதுமறைகளின் கருப்பொருளாவது புலப்பட, “முது மறையே” எனவும், இருக்கு முதலிய ஆரிய வேதங்களே மிகத் தொன்மை வாய்ந்தவை என வரலாற்றறிஞர் வரைந்து கூறுதலால் “முதுமறை” எனவும் கூறுவாராயினர். கண், கணுவுக்கும் பெயராதலால் முக்கட் பெருமானாகிய சிவமூர்த்தியை, “முக்கட் கரும்பு” என்றும், அவன் பாற் பிறந்தமை பற்றிக் “கரும்பீன் றெடுத்த முத்து” என்றும், இசைக்கின்றார். துளைபடாத நன்முத்து என்றற்கு, “முழு முத்து” எனல் வேண்டிற்று. முக்கனி, மாவும் பலாவும் வாழையுமாம். இவை முதிர்ந்து கனிந்த வழித் தேன் சொரியும் இயல்பின வாதல் போல முருகப் பெருமான் கருணை நிறைந்து உயிர்கட்குச் சொரியும் இயல்புடையவன் என்பது தோன்ற, “முதிர்ந்த முக்கனியே” என்று மொழிகின்றார். பொன் - திருமகள். தோளை யிடமாக வுரைப்பதால் இவள் வெற்றித் திருமகளாம் என்பாராய்ப் “பொன்னைப் புயங் கொண்டவன்” என வுரைக்கின்றார். முருகனுடைய நிறமும் அருமையும் பற்றிப் “பொன்னே” எனப் புகழ்கின்றார். புனித பூரணம், புனிதத்தின் பூரணம் என விரிந்து, தூய்மையின் நிறைவு எனப் பொருள் படுவதாயிற்று. போதம் - சிவஞானம். சிவத்தின் கண் தோன்றி முருகனாய் உருவுற்று ஞான மூர்த்தியாய் விளங்குதலால், “போதம் மணக்கும் புது மலரே” எனப் புகல்கின்றார். புலவர் - தேவர்; அறிஞருமாம். புலவர்கட்குப் புகலிடமாயவன் என்றற்குப் “புலவர் எவரும் புகும் பதி” என்கின்றார். எவரும் என்றது, விண்ணுலகத்துத் தேவரையும், மண்ணுலகத்து நக்கீரர் முதலிய புலவர்களையும் உளப் படுத்தற்கு. நக்கீரர் முருகனை, “நூலறி புலவ” என்றும், “பலர் புகழ் நன் மொழிப்புலவர் ஏறே” என்றும் பாராட்டுதல் காண்க. “புலவர் புக்கில்” எனச் சங்கச் சான்றோர் உரைப்பது இக்கருத்தையே கொண்டிருப்பது காணலாம். உலகியல் வாழ்வு நிலையுதலின்றித் தோன்றி மறையும் என்பதனால், மின்னைப் பொருவும் உலக மயல்” என வுரைக்கின்றார். தன்கண் வாழ்வார் கருத்தைத் தான் நல்கும் இன்பங்களால் மயக்கித் தன்னின் வேறாய வாழ்வுகளை நினையாவாறு செய்யும் தன்மையால் ஞானிகள் உலகியலை விரும்புகின்றல ராதலின், அவர்களை, “உலக மயல் வெறுத்தோர்” என்றும், ஞானக் காட்சியால் அவர் காணும் ஞான வின்பம் பெரிதாதலும் அதனால் அவர்களின் உள்ளத்தில் முருகனது ஞான வொளி நின்று விளங்கிய வண்ணம் இருத்தலும் ஓர்ந்து, “வெறுத்தோர் உள்ள விளக் கொளியே” என்றும் விளம்புகின்றார். மெய்ப்பொருளாகிய இறைவன் விளங்கி நிறையுமிடம் மேல் கீழ் நடு என முத்திறப்படுவது பற்றி, “மேலும் கீழும் நடுவமென விளங்கி நிறைந்த மெய்த்தேவே” என்கின்றார். “அத்தேவர் தேவர் அவர் தேவர் என்று இங்ஙன், பொய்த் தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே” . . . பற்றற நான் பற்றுகின்ற மெய்த் தேவர் தேவர்” (கோத்தும்பி) என்று திருவாசகம் ஓதுவது காண்க. செத்துப் பிறக்கும் சிறு தெய்வங்களைப் பொய்த் தேவர் என்னும் வழக்குண்மையால், அவரின் வேறுபடுத்தற்கு முருகனை, “மெய்த் தேவே” என்று சிறப்பிக்கின்றார் எனினும் பொருந்தும், நல்ல போகத்தனாயினும் சிவபெருமான் யோகமே புரிபவனாதலால், சிவயோகிகளைத் “தன்னைப் பொருவும் சிவபோகம் தன்னையுடையோர்” என உரைக்கின்றார். “நல்லூர்ப் பெருமணத்தான் நல்ல போகத்தன் யோகத்தையே புரிந்தான்” (நல். பெரு) என ஞானசம்பந்தர் நவில்வது காண்க. சிவ யோகத்தின் பயன் சிவபோகமாதலால், “சிவபோகம் தன்னையுடையோர் தம் பயனே” எனப் புகழ்கின்றார்.

     இதனால், முதற் பொருளாய், முதுமறையாய், முழுமுத்தாய், முக்கனியாய்ப் பொன்னாய்ப் பூரணமாய்ப் புதுமலராய்ப் புலவர் புகும் பதியாய், உள்ள விளக் கொளியாய், மெய்த் தேவாய்ச் சிவயோகியர் பயனாய் உள்ள சைவமணியும் சண்முகனுமாகிய பெருமானே அருள் புரிக என வேண்டிக் கொண்டவாறாம்.

     (4)