474.

    பித்தப் பெருமான் சிவபெருமான்
            பெரிய பெருமான் தனக்கருமைப்
        பிள்ளைப் பெருமான் எனப்புலவர்
            பேசிக் களிக்கும் பெருவாழ்வே
    மத்தப் பெருமா னீக்குமொரு
            மருந்தே யெல்லாம் வல்லோனே
        வஞ்சச் சமண வல்லிருளை
            மாய்க்கும் ஞானமணிச் சுடரே
    அத்தக் கமலத் தயிற்படைகொள்
            ளரசே மூவர்க் கருள்செய்தே
        ஆக்க லளித்தல் அழித்தலெனும்
            அம்முத் தொழிலும் தருவோனே.
    சத்த வுலக சராசரமும்
            தாளி லொடுக்கும் தனிப்பொருளே
        தணிகா சலமாம் தலத்தமர்ந்த
            சைவ மணியே சண்முகனே.

உரை:

     பித்தப் பெருமானும், சிவபெருமானுமாகிய பெரிய பெருமானுக்குப் பிள்ளையாகிய பெருமான் என்று புலவர் தம்மிற் பேசிக் களிப்புறும் பெருவாழ்வாக விளங்குபவனே, மத்தம் கொண்டது போன்ற பெரிய மயக்கத்தை நீக்கி யருளும் ஒப்பற்ற மருந்தாகியவனே, எல்லாம் வல்லவனே, வஞ்ச மிக்க சமண் சமய மென்னும் வன்மையான இருளைப் போக்குகின்ற ஞானமாகிய மணி யொளியே, கையாகிய தாமரைப் பூவில் வேற்படையை ஏந்தும் அருளரசே, பிரமன் திருமால் உருத்திரன் என்ற மூவர்பாலும் அருள் கூர்ந்து படைத்தல் காத்தல் அழித்தல் என்ற அந்த மூன்று தொழில்களையும் முறையே ஈந்தருளியவனே, ஏழாகிய உலகங்களையும் திருவடியில் ஒடுக்கி யருளும் தனிமுதற் பொருளே, தணிகைமலை யெனப்படும் திருப்பதியில் எழுந்தருளும் சைவத் தலைமணியான சண்முகப் பெருமானே, எமக்கு அருள் புரிக, எ. று.

     பித்தப் பெருமான் - பித்தனாகிய பெருமான். தன்பால் உண்டாகிய அன்பாற் பித்துற்றார்க்குப் பெரும் பித்தனாய் ஒழுகுதலால் சிவனைப் பித்தப் பெருமான் என்பர். “பித்தர்க்குப் பித்தனாய் நின்றான்” (புன்கூர் - நீடூர்) என்று திருநாவுக்கரசர் கூறுவது காண்க. “தில்லைச் சிற்றம்பலவன் பெண்பாலுகந்தான் பெரும் பித்தன்” (சாழல்) என மணிவாசகரும் கூறுவர். தேவர் பெருமான்கள் பலரினும் பெரியவன் என்பது கொண்டு, “பெரிய பெருமான்” எனப் பேசுகின்றார். சிவபெருமானுக்குப் பிள்ளை யாயினமையின் முருகன் “பிள்ளைப் பெருமான்” எனப்படுகின்றான். பித்தப் பெருமானாயினும் சிவபெருமான் பெரிய பெருமானாவன்; அவன் தனக்கு ஓர் அருமைப் பிள்ளைப் பெருமானைப் பெற்றுக் கொண்டான் என்று விண்ணகத் தேவர்கள் தம்முள் பேசி மகிழ்கின்றார்கள்; மண்ணகத்துப் புலவர்கள் தம்மிற் பேசி இன்புறுகின்றார்கள் என இருபொருள் படப், “புலவர் பேசிக் களிக்கும் பெருவாழ்வே” என்று புகழ்கின்றார். பெரிய பெருமான் தனக்கு ஒரு சிறிய பெருமானைப் பெற்றுக் கொண்டார் என்றால், சிறுமை பேசுகின்றோம் என்ற குற்ற மெய்துமென்ற அச்சத்தால் புலவர்களாதலால், “அருமைப் பிள்ளைப் பெருமானைப்” பெற்றுக் கொண்டா ரெனப் பேசி மகிழ்கின்றார்கள் என்பதொரு நயம் பெறப்படுதல் அறிக. பிள்ளைமை யுடையனாயினும் பெருவாழ் வளிக்கும் பெருமான் என்றற்குப் “பெரு வாழ்வே” என்று கூறுகின்றார். பித்த மிகுதியால் நினைவு செயல்களில் உளதாகும் மந்த நிலை மத்தம் என்பர் தமிழ் மருத்துவர். மத்தம் மிக்கு ஒரு பொருளிலோ செயலிலோ ஒன்றி நிற்குமாயின் உன்மத்தம் எனவும், ஒன்றாது பலவற்றில் மயங்குமாயின் மயக்கம் எனவும், உண்மை காண மாட்டாத இருணிலை எய்தின் மால் எனவும் அறிஞர் கூறுவர். மத்தத்தின் அடியாகத் தோன்றும் பெருமயக்கத்தை வள்ளலார், “மத்தப் பெருமால்” என்றும், நோய் என்றும், அதனை நீக்கற்குரிய மருந்தாகுபவன் முருகப் பெருமான் என்பாராய்ப் “பெருமால் நீக்கும் மருந்தே” என்றும் உரைக்கின்றார். மத்தம் மனத்தைப் பற்றியது என்ற குறிப்புத் தோன்ற, “மத்த மனத்தொடு” (சதகம்) என்றும், “பேச்சரிதாம் மத்தமேயாக்கும் வந்து என் மனத்தை” (வெண்பா) என்றும் மணிவாசகர் உரைப்பது காண்க. வரம்பிலாத ஆற்றலுடைமை அவனுடைய எண் குணங்களில் ஒன்றாதலால், “எல்லாம் வல்லோனே” எனப் போற்றுகின்றார். முன்னை நாட்களில் சமணர்கள் தங்கள் சமயத்துக்கு மக்களைச் சேர்க்கு முயற்சி மேற்கொண்டு வஞ்சகச் சூழ்ச்சி செய்ததோடு சமயக் கருத்துக்களைத் தெளிய வுரைக்காமல் வேற்று மொழியால் இருட்டடிப்புச் செய்தமை பற்றி, அவரது கொள்கையை, “வஞ்சச் சமண வல்லிருள்” என்றும், அவர்களின் முயற்சியும் சூழ்ச்சியும் ஞானசம்பந்தர் வழியாகத் தவிடு பொடி யாயினமை தோன்ற, “சமண வல்லிருளை மாய்க்கும் ஞானமணிச் சுடரே” என்றும் இயம்புகின்றார். “குணமறிவுகள் நிலையில் பொருளுரை மருவிய பொருள்களு மில திணம் எனும்” (சிவபுரம்) சமணர் என்றும், ஒருதலைத் துணிவின்றி, “உண்டிலை என்றே தம் கையினி லுண்போர்” (புறவம்) என்றும் ஞானசம்பந்தர் பாடுவதால் அறியலாம். ஞானசம்பந்தர் முருகனுடைய அவதார மென நினைந்து எழுதினோரு முண்டாகையால், ஞானசம்பந்தர் செயலை முருகன் மேலேற்றி மொழிகின்றார். அத்தம் - கை; வடசொற் றிரிபு. அயிற் படை - வேற்படை. மூவர் - பிரமன் மால் உருத்திரன். மூவர்க்கும் ஆக்கல் முதலிய முத்தொழிலையும் தந்த முதல்வன் என்பது பற்றி, “அம்முத் தொழிலும் தருவோனே” எனக் கூறுகின்றார். “படைத்தளித் தழிப்ப மும்மூர்த்திகளாயினை” (எழுகூற்) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. “செழும் பொழில்கள் பயந்து காத்தழிக்கும் மற்றை மூவர் கோனாய் நின்ற முதல்வன்” (சதகம்) என்பது திருவாசகம். சத்தவுலகம் - ஏழுலகம். சத்தம், வடசொற், றிரிபு. “ஏழுகொலாம் அவர் ஆளும் உலகங்கள்” (பொது. விடந்) என்று திருநாவுக்கரசர் உரைப்பர். சரம், இயங்குதிணை; அசரம், நிலைத் திணைப் பொருள்கள். உலகனைத்தும் அவன் திருவடியில் ஒடுங்குமென்பது பண்டையோர் கொள்கை. “யாழ்கெழு மணிமிடற் றந்தணன், தாவில் தாணிழல் தவிர்ந்தன்றால் உலகே” (அகம். கட) என்று பாரதம் பாடிய பெருந்தேவனார் கூறுவது காண்க. உலகங்களை ஒடுக்குமிடத்து, உலகனைத்தையும் காரண மாயையிலும் மாயையைத் தன் அருட்சத்தியிலும், அச்சத்தியைத் தன்னுள்ளும் ஒடுக்கித் தான் தனிமுதற் பொருளாய் இருத்தல் விளங்கத் “தனிப் பொருளே” என்று சிறப்பிக்கின்றார்.

     இதனால், தணிகை மலையில் சைவ மணியாய்ச் சண்முகனாய் விளங்கும் முருகப்பெருமான், புலவர் பேசிக் களிக்கும் பெருவாழ்வும், மால் நீக்கும் மருந்தும், எல்லாம் வல்லவனும், ஞானமணிச் சுடரும், அயிற் படை யரசும், முத்தொழில் தருவோனும், தனிப்பொருளும் ஆவன் என விரியக் கூறியவாறாம்.

     (5)