475. ஏத மகற்று மென்னரசே
யென்னா ருயிரே யென்னறிவே
என்கண் ணொளியே யென்பொருளே
யென்சற் குருவே யென்தாயே
காத மணக்கு மலர்கடப்பங்
கண்ணிப் புயனே காங்கெயனே
கருணைக் கடலே பன்னிருகண்
கரும்பே யிருவர் காதலனே
சீத மதியை முடித்தசடைச்
சிவனார் செல்வத் திருமகனே
திருமா லுடன்நான் முகன்மகவான்
தேடிப் பணியும் சீமானே
சாதல் பிறத்தல் தவிர்த்தருளும்
சரணாம் புயனே சத்தியனே
தணிகா சலமாம் தலத்தமர்ந்த
சைவ மணியே சண்முகனே.
உரை: எனக்கு உளதாகும் துன்பத்தைப் போக்கி யருளும் அருள் வேந்தனே, எனது அரிய உயிர் போல்பவனே, எனது அறிவாய் விளங்குபவனே, எனது கண்ணின் ஒளியாய் இருப்பவனே, எனக்கு இனிய பொருளே, எனது சற்குருவே, எனக்குத் தாயாகியவனே, காத தூரம் நறிய மணம் மகழும் கடம்பு மலரால் தொடுக்கப்பட்ட கண்ணி சூடுபவனே, அம்மலராலாய மாலை யணிந்த தோளை யுடையவனே, காங்கேயனே, கருணையாற் கடல் போன்றவனே, பன்னிரண்டு கண்களையுடைய கரும்பே, வள்ளி தெய்வயானை என்ற இருவர்பாற் காதலன்பு உடையவனே, குளிர்ந்த பிறைச் சந்திரனை முடியிற் சூடிய சிவனுக்குச் செல்வ மகனே, திருமாலும் நான்முகனும் இந்திரனும் தேடி வந்து வணங்கும் திருவடிகளை யுடைய செல்வனே, இறப்புப் பிறப்புக்களைப் போக்கி யருளும் திருவடித் தாமரைகளை யுடையவனே, மெய்ம்மை யுருவானவனே, தணிகை மலை யென்னும் திருப்பதியில் எழுந்தருளும் சைவத் தலைமை மணியே, சண்முகப் பெருமானே, வணக்கம், எ. று.
ஏதம் துன்பம்; குற்றமுமாம். குற்றத்தைப் பொறுத்துத் திருத்தி நன்னடை நல்குவதுபற்றி, “என் அரசே” என்று கூறுகின்றார். “நன்னடை நல்கல் வேந்தற்குக் கடன்” என்பர் பொன் முடியார் என்னும் சான்றோர் (புறம்). அன்புரிமை தோன்ற, “என் ஆருயிரே” எனவும், “அறிவினுள் அருளால் மன்னி” (சிவ. சித்தி) அறிவன அறிவித்தல் தோன்ற, “என் அறிவே” எனவும் கூறுகின்றார். “அஞ்ஞானம் தன்னை யகல்விக்கும் நல்லறிவே” என்பது (சிவபு) திருவாசகம். இன்றியமையாமை புலப்பட, “என் கண்ணொளியே” என்கின்றார். உலகில் வாழ்வார்க்கு வாழ்வளிக்கும் பொருள் போலத் தமக்கும் நல்வாழ்வு நல்குவது பற்றி, “என் பொருளே” என்றும், நன்ஞானம் வழங்குவதால் “என் சற்குருவே” என்றும் கூறுகின்றார். “அறிவதை யருளி மேல்நெறி யெலாம் புலமாக்கிய எந்தை” (சதகம்) என வாதவூரர் ஓதுவது காண்க. கடம்புமலர் மண மிகவுடைய தென்றற்குக் “காதம் மணக்கும் மலர் கடப்பங் கண்ணி” என்றும், கண்ணியும் மாலையும் கடம்பு மலராதலாற் “கடப்பங் கண்ணிப் புயனே” என்றும் இசைக்கின்றார். சரவணப் பொய்கையிற் கங்கையால் வளர்க்கப் பட்டமையால் முருகனுக்குக் “காங்கேயன்” என்பதொரு பெயர் என அறிக. காங்கேய னெனற்பாலது காங்கெயன் எனக் குறுகிற்று. இருவரென்றது, வள்ளிநாயகியையும் தெய்வயானையையும், காதலன், இங்கே
காதற் கணவன் என்னும் பொருள்பட வந்தது. செல்வ மகன் என்னாது செல்வத் திருமகள் என்பது ஞானத் திருவுருவினன் என்றற்கு. மகவான் - இந்திரன். நூறு யாகங்கட்கு மேற்படச் செய்தவன் என்ற சிறப்புப்பற்றி இந்திரனை, “மகவான்” என்பது மரபு. மகம் - யாகம். சீமான் - செல்வமும் புகழும் சிறக்கவுடையவன். திருவடிப் பேறு பெற்றார் பிறப்பிறப்பில்லாத பெருவாழ் வெய்துதலால், “சாதல் பிறத்தல் தவிர்த் தருளும் சரணாம் புயன்” எனப்படுகின்றான். சரண அம்புயம், சரணாம் புயம் என வந்தது. சரணம் - திருவடி; அம்புயம் - தாமரை; திருவடித் தாமரை யென்பது இதன் பொருள். சத்தியம் - மெய்ம்மை.
இதனால், திருத்தணிகைச் சைவமணியாகிய சண்முகப் பெருமான், அரசும் ஆருயிரும் அறிவும் கண்ணொளியும் பொருளும் சற்குருவும் தாயுமாய்க் கடம்பணியும் முடியும் தோளும் உடையனாய்க் காங்கேயனாய், கருணைக் கடலாய், கரும்பாய், இருவர் காதலனாய், திருமகனாய், சீமானாய், சரணாம்புயனாய், சத்தியனாய் விளங்குகிறான் என விளம்பியவாறாம். (6)
|