478.

    ஏத நிறுத்து மிவ்வுலகத்
            தியல்பின் வாழ்க்கை யிடத்தெளியேன்
        எண்ணி லடங்காப் பெருந்துயர்கொண்
            டெந்தா யந்தோ விளைக்கின்றேன்
    வேத நிறுத்து நின்கமல
            மென்றாள் துணையே துணையல்லால்
        வேறொன் றறியே னஃதறிந்திவ்
            வினையேற் கருள வேண்டாவோ
    போத நிறுத்தும் சற்குருவே
            போத ஞானத் தறிவுருவே
        பொய்ய ரறியாப் பரவெளியே
            புரமூன் றெரித்தோன் தரும்ஒளியே
    சாத னிறுத்து மவருள்ளத்
            தலந்தா ணிறுத்தும் தயாநிதியே
        தணிகா சலமாந் தலத்தமர்ந்த
            சைவ மணியே சண்முகனே.

உரை:

     தணிகை மலையாகிய திருப்பதியில் எழுந்தருளும் சைவத் தலைமை மணியே, சண்முகப் பெருமானே, எந்தையே, ஞானப் பொருளை நெஞ்சின்கண் நன்கு நிலைபெற உணர்த்துகின்ற சற்குலு நாதனே, தூய ஞானத்தின் அறிவுருவாகிய பெருமானே, பொய்யுடைய மாக்களால் அறியப் படாத பரவெளியே, முப்புரங்களை எரித்த சிவபெருமான் பயந்த ஒளிப்பொருளே, சாதலை நீக்கும் ஞானிகளின் திருவுள்ளத்தில் திருவடியை வைத்தாளும் தயாநிதியே, குற்றத்தையே நிலையாகச் செய்விக்கும் இவ்வுலகத்தின் இயல்பில் அமைந்த வாழ்வின்கண் எளியனாகிய யான் எண்ணற் கடங்காத பெருந் துன்பங்களைக் கொண்டு, அந்தோ எந்தையே, மனம் சோர்ந் தொழிகின்றேன்; வேதங்கள் பரவும் நினது திருவடித் தாமரையின் துணையே துணையாவ தல்லது வேறு யாதும் அறிகிலேன்; அந்த எனது நிலைமையை அறிந்து தீவினையை யுடைய எனக்கு நீ அருள் புரிய வேண்டு மல்லவா? அருள் செய்க. எ. று.

     போதம் - சிவஞானச் செம்பொருள். கொள்வோன் கொண்டுணரும் மன வன்மை நோக்கி எளிதின் உணர்ந்து இனிதின் மேற்கொண்டொழுகுவிக்கும் திறல் மிக்க ஆசிரியன் முருகப் பெருமான் என்பாராய்ப் “போதம் நிறுத்தும் சற்குருவே” என்றும், தூய ஞானத்தை அறியும் அறிவுருவும் அவனே யாவன் என்பார், “புனித ஞானத்து அறிவுருவே” என்றும் இயம்புகின்றார். காரைக்காலம்மையார், “அறிவானும் தானே அறிவிப்பான் தானே, அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற மெய்ப்பொருளும் தானே” (திருவந்தாதி) என்பது காண்க. நிலை இல்லாத பொய்ப் பொருளையே நோக்கும் மக்களுக்குப் பொய்ப் பொருள்களாகிய நில முதலிய தத்துவ தாத்துவிகங்கட்கு அப்பாலாய் மெய்யாய் உள்ள பரவெளி புலனாகாமையால் “பொய்யர் அறியாப் பரவெளியே” என்று உரைக்கின்றார். பரவெளி - பரசிவம் திகழும் இடம்; சுத்த மாயா தத்துவத்தின் உச்சியில் விளங்கும் சிவ தத்துவத்துக் கப்பாற் பட்டது. இதனைப் பரசிவ வெளி யெனவும் பராகாசம் எனவும் சிதாகாசமெனவும் சைவ நூல்கள் கூறுகின்றன. பிரகிருதி, மிசிரம், சுத்தம் என்ற மூவகைத் தத்துவச் சூழல்களுக்கும் அப்பாற் பட்ட பரசிவ வெளியைத் திருநாவுக்கரசர், “அப்பாலுக் கப்பாலுக் கப்பாலானை, ஆரூரிற் கண்டடியேன் அயர்ந்தவாறே” என்கின்றா ரெனவும், வேதக் காட்சிக்கும் போதக் காட்சிக்கும் அப்பாற் பட்டது பரவெளி யென்றற்கு, மணிவாசகர், “அப்பாலுக் கப்பாலைப் பாடுதுங் காண் அம்மானாய்” என்கின்றா ரெனவும் கூறுவர். சிவனுடைய நெற்றிக் கண்ணில் ஒளிப் பொறியாய் வெளிப்பட்டமை நினைந்து, “புரமூன் றெரித்தோன் தரும் ஒளியே” என வுரைக்கின்றார். சாதல் நிறுத்துமவர்- இறவாப் பெருநிலை யெய்திய பெருமக்கள். சுரர், திருவாதவூரர் முதலியோர் சாகா நிலை பெற்றவர் என்பர்; “முத்தர்வாழும் ஞானமிசை வீழாமலே ஞானவொளி யுற்றதற்கு ஏசில் சுகர் வாதவூர் நாயனார் கரியாம்” எனப் பாம்பன் குமர குருதாச சுவாமிகள் கூறுவது அறிக. துன்பம் மிக்குத் தோன்றுவது பற்றி, உலகத்தை, “ஏதம் நிறுத்தும் இவ்வுலகம்” எனவும், இதனால் இவ்வுலக வாழ்க்கையும் துன்ப வியல்பினது என்பார், “இயல்பின் வாழ்க்கை” எனவும் கூறுகின்றார். “இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும், நன்பக லமையமும் இரவும் போல, வேறுவே றியலவாகி மாறெதிர்ந் துளவென உணர்ந்தனை யாயின்” (அகம். 327) என்றும், “இன்னா தம்ம வுலகம்” (புறம். 194) என்றும் சங்கச் சான்றோர் துணிந்து கூறுவது காண்க. இளைத்தல் - மனச்சோர்வு. வேதக் காட்சிக்கு முருகனது முழுமை காணப்படாமை தோன்ற, “வேதம் நிறுத்தும் கமலமென்றாள்” என்கின்றார். இறைவன் திருவடியல்லது துணைவேறில்லை எனச் சான்றோர் பலரும் கூறுவதால், “கமலமென்றாள் துணையே துணை யல்லால் வேறொன் றறியேன்” எனப் புகல்கின்றார். திருவள்ளுவரும், “பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார்” என்பர். இத்திருக்குறட்கு உரைகண்ட நாவலர் சோமசுந்தர பாரதியார், பிறவிப் பெருங் கடலை நீந்துவோராகிய மக்களில், இறைவன் அடி சேராதார் நீந்தார் என்றது ஈண்டு நினைவு கூரத் தக்கது. காட்டக் காண்டலன்றித் தானே காணும் திறமில்லாத எனக்கு எனது நிலைமை யறிந்து நீயே யருள வேண்டும் என்பார், “இவ்வினையேற்கு அருள வேண்டாவோ” எனக் கேட்கின்றார். வினைப் பிணிப்பால் எனது சிற்றறிவும் துணை செய்கிற தில்லை என்பது புலப்பட, “வினையேன்” என விளம்புகிறார். “வினையால் அசத்து விளைதலால் ஞானம் வினை தீரினன்றி விளையாவாம்” என்று மெய்கண்டார் கூறுகின்றார்.

     இதனால், சைவ மணியே, சண்முகனே, எந்தாய் சற்குருவே, ஞானத்தறிவுருவே, பரவெளியே, ஒளியே, தயாநிதியே பெருந்துயர் கொண்டு இளைக்கின்றேனாகத் துணைவேறொன் றறியேனாதலின், அருள வேண்டாவோ என முறையிட்டவாறாம்.

     (9)