479.

    முருகா வெனநின் றேத்தாத
            மூட ரிடம்போய் மதிமயங்கி
        முன்னும் மடவார் முலைமுகட்டின்
            முயங்கி யலைந்தே நினைமறந்தேன்
    உருகா வஞ்ச மனத்தேனை
            உருத்தீர்த் தியமன் ஒருபாசத்
        துடலம் நடுங்க விசிக்கிலவற்
            குரைப்ப தறியேன் உத்தமனே
    பருகா துள்ளத் தினித்திருக்கும்
            பாலே தேனே பகரருட்செம்
        பாகே தோகை மயில்நடத்தும்
            பரமே யாவும் படைத்தோனே
    தருகா தலித்தோன் முடிகொடுத்த
            தரும துரையே தற்பரனே
        தணிகா சலமாம் தலத்தமர்ந்த
            சைவ மணியே சண்முகனே.

உரை:

     தணிகை மலையாகிய திருப்பதியில் எழுந்தருளும் சைவ மணியே, சண்முகப் பெருமானே, உத்தமனே, பருகாமலே மனத்தின்கண் இனிக்கும் பாலும் தேனும் போல்பவனே, சிறப்பாகச் சொல்லப்படுகின்ற திருவருளாகிய செம்பாகே, தோகையை யுடைய மயிலை யூர்தியாகக் கொண்டு செலுத்தும் பரம்பொருளே, யாவையும் படைத்தவனே, இந்திரனுக்கு முடி யருளிய தருமவானே, தற்பரனே, முருகா என்று நின் திருமுன் நின்று போற்றித் துதிக்காத மூட மக்களிடம் சென்று அறிவு கலங்கியும், காதலுற்று நினைக்கும் இளமகளிரின் கொங்கை மேல் வீழ்ந்து தழுவி அலைவுற்று நின்னை மறந் தொழிந்தேன்; நின்னை நினைந்து உருகாத வஞ்சம் நிறைந்த மனமுடைய என்னை வெகுண்டு இயமன் தனது ஒப்பற்ற கயிற்றால் என் உடல் நடுங்க உயிரைப் பிணித்து இழுப்பானாயின் அவனுக்கு யாது சொல்வேன், எனக்கொன்றும் தெரியவில்லையே! எ. று.

     முருகப் பெருமான் திருப்பெயரை யோதி வணங்கி வழிபடாதவர் உண்மை யறியாதவர் என்ற கருத்தால், “முருகா என நின்று ஏத்தாத மூடர்” எனவும், அவர்கள் தமது மூட மதியால் தம்பால் அடைந்தார் அறிவையும் கலக்கி விடுவது விளங்க, “மூடரிடம் போய் மதி மயங்கி” எனவும் உரைக்கின்றார். முன்னுதல் - நினைத்தல். வேட்கையை யெழுப்பிக் காமக் கூட்டத்தை நினைப்பிக்கும் மகளிரை, “முன்னும் மடவார்” என்றும் அவர் கலப்பால் மன நினைவு அலமருவது பற்றி, “முயங்கி யலைந்து” என்றும், காம நினைவால் முருகனது நினைவு நெஞ்சின்கண் மறந்தைமைக்கு வருந்துவாராய், “நினை மறந்தேன்” என்றும் இயம்புகின்றார். எளிதில் உருகும் இயல்பிற் றாயினும், வஞ்சமும் பொய்யும் பிறவுமாகிய தீய நினைவுகள் உண்டாகிய வழி உருகாமற் கல் போல் உறைந்து போதலால், “உருகா வஞ்ச மனத்தேன்” என்றும், உருகாத மனத்தவரை இறப்பச்சம் எளிதிற் பற்றி அலைப்பதாகையால், “உருத்தீர்த்து இயமன் ஒருபாசத் துடலம் நடுங்க விசிக்கில் அவற்கு உரைப்பது அறியேன்” என்றும் கூறுகின்றார். பாசம் - உயிர் கவரும் கயிறு. யாதோ ஒன்று பிணித்து ஈர்ப்பது போல உயிர் நீங்குங்கால் உடம்பில் அசைவு தோன்றுவதால், “உடல் நடுங்க விசிக்கில்” என வுரைக்கின்றார். விசித்தல் - பிணித்தல். திருவருள் சுவை மயமாய் இருப்பதால் இன்னதென வரையறுத் துரைக்க மாட்டாமல், “உள்ளத் தினித்திருக்கும் பாலே தேனே செம்பாகே” எனப் பகர்கின்றார். பரம் - பரம்பொருள். அசுரர் கவர்ந்து கொண்ட தேவருலக அரசையும் மணி முடியையும் இந்திரனுக்கு மீளவும் கொடுத்தருளிய நலம் வியந்து, “தரு காதலித்தோன் முடி கொடுத்த தரும துரையே” என்று புகழ்கின்றார். தரு - கற்பகத் தரு. கற்பக மரம் நின்ற நாடாதல் பற்றி இந்திரன் நாட்டைக் “கற்பக நாடு” என்றல் மரபு. கற்பகத் தரு நின்ற நாட்டை விரும்பி யாள்பவன் என்பது பற்றி, இந்திரனைத் “தரு காதலித்தோன்” என்கின்றார். தற்பரன் - தனி மேலோன்.

     இதனால், சைவ மணியே, சண்முகனே, தற்பரனே, தருமதுரையே, யாவும் படைத்தவனே, பரமே, பாலே, தேனே, அருட் செம்பாகே, மதி மயங்கி அலைந்து நினை மறந்தேன்; உத்தமனே, இயமன் பாசத்தால் உருத்து உடல் நடுங்க விசிக்கில் உரைப்ப தறியேன்; அருள் புரிக என வேண்டிக் கொண்டவாறாம்.

     (10)