48. அமராவதி யிறைக் காருயி ரீந்த
அருட் குன்றமே
சமரா புரிக்கரசே தணிகாசலத்
தற்பரனே
குமரா பரமகுருவே குகா வெனக்
கூவி நிற்பேன்
எமராசன் வந்திடுங்கால் ஐயனே எனை
ஏன்று கொள்ளே.
உரை: தணிகை மலையில் எழுந்தருளும் தற்பரனே, போரூர்க்கரசனே, அமரர் உலகத்து அமராவதிக்கு அரசனாகிய இந்திரனுக்குயிர் வாழ்வளித்த அருட் குன்றமாக விளங்குபவனே, ஐயனே, குமரா, பரம குருவே, குகா என உன் திருப்பெயர்களைச் சொல்லி யழைக்கும் என்னை எமதருமன் போந்து உயிர் கவரும் போது அடியேனை ஏற்று ஆதரிக்க வேண்டுகிறேன். எ. று.
தற்பரன் - இயல்பாகவே மேன்மை யுற்றவன். சமராபுரி-போரூர்; முருகன் கோயில் கொண்டருளும் தொண்டை நாட்டுத் திருப்பதிகளில் ஒன்று. “சகலலோகமு மாசறு சகலவேதமு மேதொழு, சமராபுரி மேவிய பெருமானே” (திருப்புகழ். 795. சமாசம்) என்று அருணகிரிநாதர் உரைப்பது காண்க. இந்திரலோகத்துக்குத் தலைநகர், அமராவதி; அதனால், இந்திரன் “அமராவதிக்கு இறை” என்று குறிக்கப்படுகின்றான். சூரபதுமனைத் தலைவனாகக் கொண்ட அசுரர்களால் அலைப்புண்டு வருந்திய இந்திரன் பொருட்டுப் பெரும் போர் செய்து அசுரரை வலியழித்த இந்திரனை மீள உய்தி பெறுவித்த முருகப் பெருமான் அருட் செயலை நினைவிற் கொண்டு “அமராவதி இறைக் காருயிர் தந்த அருட் குன்றமே” என்று புகழ்கின்றார். பரம குரு - மேலான குரு. பரம சிவனுக்கே பிரணவப் பொருளைக் குரு மூர்த்தமுற்று உரைத்த நயம் தோன்றப் “பரம குருவே” என்று கூறுகின்றார் எனினும் அமையும். உயிர் கவரும் கூற்றுவனை “எமராசன்” என்கின்றார். எமன் தென்றிசைக் கோனாதல் பற்றி, “எமராசன்” என்பது வழக்கு. “தருமராசற் காய் வந்த கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே” (குறுக்கை) என்று திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. சிவன் தமர் என்ற வழி எம தூதுவர் விலகி நீங்குவர் என்பதனால், “எமராசன் வந்திடுங்கால் ஐயனே எனை ஏன்று கொள்ளே” என்று வேண்டுகிறார். “நாவில் நவின் றுரைப்பார்க்கு நணுகச் சென்றால், நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே” (அடைவு) என்று பெரியோர் உரைப்பது அறிக.
இதனால், சாகுங் காலத்தில் எமராசன் கையகப் படாமற் காத்தருள்க என வேண்டிக் கொண்டவாறாம். (48)
|