481.

    மருளுறு முலகிலாம் வாழ்க்கை வேண்டியே
    இருளுரு துயர்க்கட லிழியு நெஞ்சமே
    தெருளுறு நீற்றினைச் சிவவென் றுட்கொளின்
    அருளுறு வாழ்க்கையில் அமர்த லுண்மையே.

உரை:

     உலகியல் மருளுற்று நடத்தும் வாழ்க்கை தான் வாழ்வென விரும்பி நடத்தி அறிவறியாமையாகிய இருளுற்றுத் துன்பமாகிய கடலின் ஆழத்தின் சென்றொழியும் நெஞ்சமே, அறிவுக்குத் தெளிவு நல்கும் திருநீற்றைச் சிவ சிவ என்று ஓதிச் சிறிது உட்கொண்டு பூசிக் கொள்வாயேல், அருள் ஞான வாழ்வை யெய்தி இன்புறுவது மெய்யாம், எ. று.

     உலக வாழ்வின் குறிக்கோ ளறிந்து வாழ்வது தெருள் உற்ற நல் வாழ்வாகும்; அதனைத் திருவள்ளுவர் வாழ்வாங்கு வாழ்வது என்பர். அதனை நினைவிற் கொண்டே சங்கச் சான்றோர், “வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்” (புறம்) என்றனர். குறிக்கோளை யறியாது உலகியற் காட்சி நலங்களில் மருண்டு மனம் போனபடி வாழ்வது வாழ்வு ஆகாது; மணிவாசகர் வாழாத வாழ்வு என்பாராய், “வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே” (சதகம்) என்பது காண்க. இவ்வாழ்வையே, “மருளுறும் உலகிலாம் வாழ்க்கை” எனக் கூறுகின்றார். மருட்சி மிக மிக அறிவு இருளுற்றுத் துன்பத்தில் மூழ்கித் துயர் உறுவது பற்றி, “இருளுறு துயர்க்கடல் இழியும் நெஞ்சமே” என்று எடுத்து மொழிகின்றார். ஞானம் பெறுவிப்ப தென்றற்குத் “தெருளுறு நீறு” எனவும், உடம்பிற்கு மருந்தா மெனற்கு, “உட்கொளின்” எனவும் உரைக்கின்றார். “போதம் தருவது நீறு” என்றும், “ஏய வுடம்பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு” என்றும் ஞானசம்பந்தர் (திருநீற்று) கூறுவது காண்க. அருளுறு வாழ்க்கை - இன்ப வுலகிற்குரிய திருவருள் அறவாழ்வு. “சிவசிவ என்றிடத் தீவினைமாளும், சிவசிவ என்றிடச் சிவகதியாமே” (திருமந்) எனப் பெரியோர் வற்புறுத்தலால், “அருளுறு வாழ்க்கையில் அமர்தல் உண்மையே” என அறிவுறுத்துகின்றார்.

     இதனாற் சிவசிவ என்று நீறணிந்து உட்கொளின் அருள் வாழ்வு எய்தலாம் என வற்புறுத்தவாறு.

     (2)