484. அன்பிலா வஞ்சர்தம் அவலச் சூழலில்
என்பிலாப் புழுவென இரங்கும் நெஞ்சமே
இன்பறாச் சண்முக என்று நீறிடில்
துன்புறாத் தனிக்கதிச் சூழல் வாய்க்குமே.
உரை: அகத்தே அன்பின்றி வஞ்சகம் உடையவர் துன்பக் கூட்டத் திடையே எலும்பில்லாத புழுப் போல வருந்தும் எனது நெஞ்சமே, இன்பம் இடையறாத சண்முகா என்று சொல்லித் திருநீறிட்டால், துன்ப மில்லாத பிறவிச் சூழல் எய்தும் காண், எ. று.
அன்பில்லாத நெஞ்சில் வஞ்சமும் பொய்யும் பிறவுமே நிறையுமாதலால், அவற்றை யுடையவர் கூட்டமே வந்து சேரும்; அக் கூட்டத்தில் பிறர்க்கே யன்றித் தமக்கும் துன்பம் விளைக்கும் நினைவு செயல்களே நிலவுமாதலால், அதனை “அவலச் சூழல்” என்றும், அதன்கண் அன்பும் வாய்மையும் உடையோர் புகுவராயின், மிகவும் வருந்துவராதலின், “என்பிலாப் புழுவென இரங்கும் நெஞ்சமே” என்றும் கூறுகிறார். வரம்பில் இன்ப வுருவின னெனச் சான்றோர் உணர்ந்துரைப்பதால், “இன்பறாச் சண்முக” என்று நீறணிந்து கொள்க. எனவும், அணிந்தால், இன்ப வுலகத்தில் இனிதுறும் இனிய பிறவி பெறலாம் என்றற்குத் “துன்புறாத் தனிக்கதிச் சூழல் வாய்க்கும்” எனவும் உரைக்கின்றார். தனிக்கதிச் சூழல் - இனிய பிறவிக்குரிய இன்ப வுலகம்.
இதனால், சண்முகா வென்று நீறணிந்து கொண்டால் வரும் பயன் கூறியவாறாம். (5)
|