487. காயமாம் கானலைக் கருதி நாடொறும்
மாயமாங் கானிடை வருந்து நெஞ்சமே
நேயமாம் சண்முக வென்று நீறிடில்
தோயமாம் பெரும்பிணித் துன்பம் நீங்குமே.
உரை: உடம்பெனப் படுகின்ற கானற் றோற்றத்தை மெய்யுரு வென்று நினைந்து நாள் தோறும் மாய வாழ்வாகிய கானத்தில் இயங்கி வருந்துகின்ற நெஞ்சமே, நேயப் பொருளாகிய சண்முகா என்று நாவால் ஓதித் திருநீறணிந்து கொண்டால் பல்வகைத் தோசங்களால் உண்டாகும் பிணியும் துன்பமும் நீங்கி விடும், எ. று.
காயம் - உடம்பு. மரஞ்செடி யின்றிக் கல்லும் மண்ணுமே யுள்ள நெடுஞ் சுரத்தில் நீர் நிலை போல் காணப்படும் கானலை நீர் நிலை எனக்கருதி நெருங்கும்போது அது நீர் நிலையாகாது பொய்யாதல் போல, இவ்வுடம்பும் கானற் றோற்றம் போல வுருவாய்த் தோன்றி உண்மை யறிவால் உற்று நோக்கும் போது பூத பரிணாமமாய்ப் பொய்யாவது பற்றிக் “காயமாம் கானலைக் கருதி” என்றும், மாயா காரியமாகிய உலக வாழ்வும் வாழ்வோரை மயக்கிக் காட்டிற் செல்வோர் வழியும் முடிவிடமும் காணாது வருந்துவது போலத் தம் வாழ்வின் முடிவிடம் காணாது வருந்துவால், “த'மாயமாம் கானிடை வருந்தும் நெஞ்சமே” என்றும் இயம்புகின்றார். நாளை நிகழ்வது இதுவெனத் திட்ட வட்டமாகக் கூற மாட்டாமை பற்றியே, “நாள்தொறும் வருந்தும் நெஞ்சமே” என்கின்றார். நேயம், ஞேயம் எனவும் வழங்கும். ஞானத்தால் உணரப்படுவது ஞேயம். உணர்பவனை ஞாதா என்றும் ஞாதிரு என்றும் கூறுவர். ஞானிகளின் ஞானக் கண்ணாற் காணப்படும் போது முருகன் ஞேயமா கின்றானாதலால், “நேயமாம் சண்முக” என்று குறிக்கின்றார், தோயம், தோஷம் என்னும் வடசொற் சிதைவு. தோஷம் என்னும் வடசொல் தோசமாகித் தோயமாகியுளது. இது தோட மெனவும் வரும். சிதைந்த சொற்களையும் வழங்கலாம் என்றற்குச் “சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்” (சொல்) எனத்தொல்காப்பியர் கூறுகின்றார். கிரகங்கள் - சிறு தெய்வங்கள், பேய்கள் முதலியவற்றால் உண்டாகும் நோய்களைத் “தோசம்” என்பது நாட்டு வழக்கு. அதனால் “தோயமாம் பெரும் பிணித் துன்பம்” எனவும், அவையும் சண்முகா என்று திருநீறிட்டால் நீங்கும் எனவும் இசைக்கின்றார்.
இதனால் சண்முகா வென்று சொல்லித் திருநீறிட்டால் வரும் பயன் உரைத்தவாறாம். (8)
|