489. பசையறு வஞ்சகர் பாற்சென் றேங்கியே
வசைபெறு நாடொறும் வருந்து நெஞ்சமே
இசைசிவ சண்முக வென்று நீறிடில்
திசைபெற மதிப்பருன் சிறுமை நீங்குமே.
உரை: ஈரமில்லாத வஞ்சம் பொருந்திய செல்வரிடம் சென்று ஏக்க முற்று இகழ்ச்சியும் பெற்று நாடொறும் புண்ணுற்று வருந்துகிற நெஞ்சமே, புகழ் பெற்ற சிவ சண்முகா என்று திருநீறு அணிந்து கொள்வாயாயின், எல்லாத் திசையிலும் உள்ள நல்லவர்கள் உன்னை நன்கு மதிப்பர்; உன்னைப் பற்றிய சிறுமையும் ஒழிந்து போம், எ. று.
உள்ளத்தில் அன்பிருந்தால் குளிர்ச்சியும் அறநினைவுகளுமே யுண்டாவதல்லது வஞ்சமும் பொய்யும் உளவாகாவாதலால், “பசையறு வஞ்சகர்” என்றும், பொருளில்லையாயின் அவர்பால் ஒருவரும் செல்லாராகலின், பொருளுடைமை யறிந்து உதவி வேண்டிச் சென்று வஞ்சிக்கப் பட்டமை புலப்பட, “வஞ்சகர் பாற் சென்று ஏங்கி” என்றும், இரந்து கேட்ட பொருட்கு மாறாக, இகழ்ச்சியும் வசை யுரையும் பெற்றமையின், “வசை பெற வருந்தும் நெஞ்சமே” என்றும் உரைக்கின்றார். நாளும் சென்று வசையே பெற்றமை தோன்ற, “நாள்தொறும்” என நவில்
கின்றார். இசை - புகழ். புலவர் பாடும்புகழ் எனற்கு, “இசை” எனப்படுகிறது. திசை, ஆகுபெயராய்த் திசையிலுள்ள நன்மக்கள் மேற்று. சிறுமை - போதிய பொருள் இல்லாமை.
இதனால், சிவ சண்முகா என வாயால் ஓதித் திருநீறணிந்தால் நன்மதிப்புப் பெறலாம்; சிறுமை நீங்கும் என அறிவுறுத்தவாறாம் (10)
|