49. கொள்ளுண்ட வஞ்சர்தம் கூட்டுண்டு
வாழ்க்கையிற் குட்டுண்டு மேல்
துள்ளுண்ட நோயினிற் சூடுண்டு மங்கையர்
தோய் வெனு மோர்
கள்ளுண்ட நாய்க்குன் கருணையுண் டோநற்
கடலமுதத்
தெள்ளுண்ட தேவர் புகழ் தணிகாசலச்
சிற்பரனே.
உரை: கடலிடத்துப் பெற்ற நல்ல தெள்ளிய அமுத முண்ட தேவர்கள் புகழும் தணிகை மலையில் எழுந்தருளும் ஞான பரனே, பிறர் பொருளைக் கொள்ளும் வஞ்ச நெஞ்சினை யுடையவர்களோடு கூடி நடத்திய வாழ்க்கையி லுண்டான துன்பங்களால் தாக்குண்டு, மேலே வந்துற்ற நோய்களால் வருந்தி மகளிர் சேர்க்கை யென்னும் கள்ளை யுண்டுறையும் நாயாகிய எனக்கு உன் அருள் எய்துமோ; என் நெஞ்சம் அஞ்சுகின்றது, காண், எ. று.
திருமால் முதலிய தேவர்கள் கூடி மலை மத்திட்டுக் கடலைக் கடைந்து பெற்ற நல்லமுதத்தை, “நற்கடலமுதம்” என்றும், உடன் தோன்றிய நஞ்சினை நீக்கித் தூய நிலையில் கொள்ளப்பட்ட தென்பது தோன்றக் “கடலமுதத் தெள்” என்றும் இயம்புகின்றார். தெளிவு, தெள்ளென வந்தது. சிற்பரன் - ஞானத்தால் மேலாயவன், கொள், முதனிலைத் தொழிற் பெயர். வஞ்சித்துப் பிறர் பொருளை வௌவுவோர் கூட்டத்தைக் “கொள்ளுண்ட வஞ்சர்தம் கூட்டு” என்றும், அவரொடு கூடி நடத்தும் வாழ்க்கையில் உளவாகும் இடுக்கண்களால் தாக்குண்டமை புலப்பட, “வாழ்க்கையிற் குட்டுண்டு” என்றும், மேன்மேல் அடரும் நோய்களை “மேல் துள்ளுண்ட நோய்” என்றும், அவற்றால் துன்புறும் திறத்தை “நோயினிற் சூடுண்டு” என்றும் சொல்லுகின்றார். மகளிர்பாற் பெறலாகும் காம நுகர்ச்சியை “மங்கையர் தோய்வெனும் ஓர் கள்” ளுணவாகக் குறிக்கின்றார். அதனால் எய்திய கீழ்மை நிலையைச் சுட்டித் தம்மை நாய் என்று இழித்துரைக்கின்றார். குற்ற மிகுதியை நினைக்கும் போது திருவருளின் அருமை தோன்றி அயர்வித்தலால் “கருணையுண்டோ” எனக் கவல்கின்றார்.
இதனால், தம்பால் உள்ள குற்றங்களை எடுத்துரைத்து மன்னித்து அருள் புரிக என்று வேண்டிக் கொண்டவாறாம். (49)
|