499. காமலர் நறவுக் கேமலர் மூவிரு காலேநீ
தேமலர் தணிகைத் தேவர் மருங்கிற் சேர்வா யேல்
ஆமல ருடையாட் கென்பெயர் பலவாம் அவையுள்ளே
ஓமல ரடிகே ளொன்றினை யொன்றென் றுரையாயே.
உரை: சோலைகளிற் பூக்கும் மலரின் தேன் பொருட்டு மலர் தோறும் செல்லும் அறுகால் வண்டே, தேன் மணம் கமழும் தணிகைத் தேவர் பெருமானாகிய முருகன்பாற் செல்வாயாயின், 'பிரணவப் பொருளை உணர்த்தருளும் அடிகளே” நீர் தந்த மலர் மாலையை யுடைய நங்கைக்குப் பற்றுக் கோடாவது உமது திருப்பெயராதலால் அதனை யருளுக' எனக் கேட்டு அவர் எனக்குப் பெயர் பலவாம் என்பராயின், அவற்றுள் உணர்வொன்றி ஓதி யுன்னுக என எனக்கு உரைப்பாயாக, எ. று.
காமலர் நறவு - சோலைகளில் மலரிடத்து ஊறும் தேன். வண்டினம் தேனுண்டற் பொருட்டே பூந்தோறும் செல்வதால். “நறவுக்கே மலர் (நாடிச் செல்லும்) மூவிருகாலே” என்று கூறுகின்றாள். வண்டிற்குக் கால்கள் ஆறு என்று கொண்டு, “மூவிரு காலே” என வண்டினை யழைக்கின்றாள். உள்ளபடி நோக்கின் வண்டினத்துக்கும் கால் நான்குதான்; உணரி இரண்டையும் கூட்டிக் கால் ஆறு எனக் கூறுகின்றார்கள். தேமலர் - தேன் மிக்க மலர்ச் சோலை. சோலை சூழ்ந்தமை பற்றித் “தேமலர்த் தணிகை” என்கின்றார். முருகப் பெருமான் முடியிலும் மார்பிலும் திருவடியிலும் தேன் மிக்க மலர்கள் கிடத்தலால் வண்டு தேனாடி அவன்பாற் செல்லா தொழியா தென்ற கருந்தால், “தணிகைத் தேவர் மருங்கிற் சேர்வாயேல்” என மொழிகின்றாள். ஓம் மலர் அடிகேள் - பிரணவப் பொருளை யுரைத்தருளும் குருபரனே; ஓம் - பிரணவம்; இதனை ஓங்காரம் என்பதும் வழக்கு. அடிகள் என்பது, அடி கேள் என விளியேற்றது. ஆமலர் உடையாள் - நீர் அன்று தந்தருளிய அந்த மாலையையுடைய பெருந்திணை நங்கை. அகரச் சுட்டுச் செய்யுளாதலின் நீண்டது. அந்நங்கைக்குப் பற்றுக் கோடாய் ஓதி யுய்தி பெறுதற்கு உன் திருப்பெயர் அறிய வேண்டுமென விழைகின்றாள்; அதனை யுரைத்தருள்க எனக் கேட்குமாறு அவள் சொல்லித் தந்தமை தோன்றவும், அது கேட்டு இசைந்த விடை கூறுவாராய், என் பெயர் பலவாம்; அவற்றுள் ஒன்றைக் கொள்க என்பாரேல் அவற்றுள் ஒன்றினைத் தேவரீரே தேர்ந் துரைத்தருள்க என விண்ணப்பிக்குமாறு வண்டுக் குரைத்தாள் என்பது விளங்கவும், சொற் பல்காமைப் பொருட்டு, “என் பெயர் பலவாம்; அவையுள் ஒன்றினை யொன்றென் றுரையாயே” என்று இயம்புகின்றார். ஒன்று - மனமொன்றி நினைந்து ஓதுக. “ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை” (தில்லை) எனப் பெரியோர் வற்புறுத்துவது காண்க. அவை யென்னும் சுட்டு முதலாகிய ஐயென் இறுதிப் பெயர் சாரியை பெறாமை புறனடையாற் கொள்ளப்படும்.
இதனாற் பெருந்திணை நங்கை வண்டினைத் தூது விடுத்தவாறாம். (7)
|