5. பதி பூசை முதலநற் கிரியையான் மனமெனும்
பசுகரணம் ஈங்க சுத்த
பாவனை யறச்சுத்த பாவனையில் நிற்குமெய்ப்
பதியோக நிலைமை யதனால்
மதிபாச மற்றதி னடங்கிடு மடங்கவே
மலைவில் மெய்ஞ்ஞான மயமாய்
வரவு போக்கற்ற நிலை கூடுமென வெனதுளே
வந்துணர்வு தந்த குருவே
துதிவாய்மை பெறுசாந்த பதமேவு மதியமே
துரிசறு சுயஞ் சோதியே
தோகை வாகனமீ திலங்குவரு தோன்றலே
சொல்லரிய நல்ல துணையே
ததிபெறும் சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை: செல்வாக்குடைய சென்னை நகர்க்கண் கந்த கோட்டத்தினுள் விளங்கும் கோயிற்குள் வீற்றிருக்கும் கந்த வேளே, தண்ணிய வேள் திகழும் தூய மணிகளுட் செம்மைச் சைவமணியாகிய சண்முகங்களையுடைய தெய்வ மணியே, சான்றோர் துதிக்கின்ற துவாத சாந்த நிலையிற் காட்சி வழங்கும் அமுத சந்திரனே, குற்ற மறுத்த சுயம் பிரகாச வடிவே, மயிலாகிய வாகனத்தில் ஞானக்கண் காணத்தோன்றும் பெருமானே, வாயாற் சொல்லுதற்கரிய நல்ல துணைவனே, சிவபூசை முதலாகக் கொண்ட செயல் வகைகளால் மனமென்னும் பசு கரணம் இவ்விடத்து அசுத்தமான பாவனைகள் உற்ற அழுக்குகள் நீங்கவே, தூய சிவ நினைவில் நிலை பெறும்; ஆங்குத் தோன்றும் உண்மைச் சிவ யோகத்தால் பொருளாக வைத்து எண்ணப்படும் பாச வகைகள் நீங்கிச் சிவத்தின்கண் அடங்கி யொழியும்; அடங்கிய போது மயக்கமில்லாத உண்மை ஞான மயமாய்ப் பிறவிச் சூழலிற் புகுதலும் மீளலும் இல்லாத சிவபோக நிலைவந்தடையும் என்று என் உள்ளத்தில் தோன்றி அறிவுரை நல்கிய குருமூர்த்தியே வணக்கம். எ. று. ததி, செல்வ மலிவாற் பிறக்கும் சிறப்பு; அதனை யுடையார்க்கு எங்கும் யாவரும் சிறப்புச் செய்வது பற்றி அத்தகுதி ததி யெனப்படுகிறது. நாட்டரசின் தலைநகராய்ப் பெருவாணிகத்துக் கிருக்கையாய் விளங்குவது கொண்டு “ததிபெறும் சென்னை” என்று புகழ்கின்றார். ஆன்மார்த்த பூசையாகிய சிவபூசை, பதி பூசை எனப்படுகிறது; சிவாலய வழிபாடு பரார்த்தமாகும். பத்தி நெறிக்கண் நிற்பார் நாளும் செய்யும் செயல் வகையாதலின் “பதிபூசை முதலாய கிரியை” என்று கூறுகின்றார். இக்கிரியைகளால் விளையும் பயன் கூறலுற்ற வள்ளற் பெருமான், மண்ணியல் வாழ்வில் நாளும் வந்து தாக்கும் பல்வகை நினைவுகளால் மாசுபடும் மனம் அது நீங்கித் தூய்மை யுறும் என்பாராய், “மனமெனும் பசு கரணம் ஈங்கு அசுத்த பாவனை அறும்” என உரைக்கின்றார். “துஞ்சும் நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல்புகலூர்” (புகலூர்) என ஞானசம்பந்தர் நவில்வர். மல மாயை கன்மங்களாற் கட்டுற்ற உயிர் பசு வெனப்படுவதால், பசுவுக்கமைந்த உட் கருவியாவது பற்றி “மனமெனும் பசுகரணம்” என உரைக்கின்றார். கரணம், கருவி. மனம் தமிழில் நெஞ்செனப் படுதலால், அதன்பாற் படிந்து மறைக்கும் மாசு ஞானசம்பந்தரால் “நெஞ்சிருள்” என்று காட்டப்படுகிறது. நெஞ்சு இருள் நீங்குதலாவது, மாசுற்ற நினைவு இல்லாதாதல். மாசாகிய இருளையே வள்ளற் பெருமான் “அசுத்த பாவனை” எனச் சொல்லுகிறார். பாவனை, நினைவு. ஈங்கு, இவ்வுலக வாழ்வு. அசுத்த நினைவுகள் நீங்குமிடத்துத் தூய ஞானவின்ப நினைவுகள் நிறைவது பற்றி, அசுத்த பாவனையற மனம் “சுத்த பாவனையில் நிற்கும்” என்று கூறுகிறார். திருவள்ளுவரும் “இருள் நீங்கி யின்பம் பயக்கும்” (குறள்) என்பது காண்க. தூய ஞான நினைவு மெய்ப் பொருளைக் காட்டி அதனை யடையச் செய்விக்கு மென்றற்குச் “சுத்த பாவனையில் நிற்கும் மெய்ப்பதியோக நிலைமை” என்று கூறுகிறார். யோகம், கூடுதல். ஆன்மா சிவயோகம் பெறின், அதனைப் பற்றியிருக்கும் பாசங்கள் என்னாம் என்றெழும் கேள்விக்கு விடை கூறுவாராய், “பாசம் அற்று அதின் அடங்கிடும்” என்று கூறுகிறார். ஆன்மாவும் சிவமும் சைதன்யங்களாதலால், அசேதனமாகிய பாசம் சிவத்தின்கண் ஒடுங்கியிருக்கும் மாயையாகிய அசிற் சத்தியில் அடங்கும் என்பதை உணர்த்தற்கு “அதின்” எனச் சுட்டி மொழிகின்றார். மலமாகிய பாசம் சகசம் என்றும், மாயை கன்மங்களாகிய பாசம் ஆகந்துகம் என்றும் ஆன்றோரால் மதித்துரைக்கப்படுவது பற்றி “மதிபாசம்” என்று சிறப்பித்துரைக்கின்றார். பாசம் நீங்கிய ஆன்மா சுத்த சித்துருவாய் ஞானப் பொருளாகிய சிவத்தின் அருளொளியால் நெருப்பிற் காய்ந்து சிவந்த இரும்பு போலச் சிவஞான வின்ப வடிவ முறுதல் தோன்ற “மலைவில் மெய்ஞ்ஞான மயமாய் வரவு போக்கற்ற நிலை கூடும்” என உபதேசிக்கப் பெற்றதாக வள்ளலார் கூறுகின்றார். மலைவு, மயக்கம். பாசமற்ற போது மயக்கமின்மை வற்புறுத்துதற்கு “மலைவில் மெய்ஞ் ஞானம்” என்றும், சிவத்தை எய்தினோர் மீளப் பிறப்பும் இறப்பும் இலராதலால், “வரவு போக்கு அற்றநிலை கூடும்” என்றும், இச்சிவஞான யோகக் கருத்துக்களை முருகப் பெருமான் குருவாய் மனத்தின்கண் எழுந்தருளி உபதேசித்தான் என்பாராய், “எனது உளே வந்து உணர்வு தந்த குருவே” என்றும் இயம்புகின்றார். வரவு, பிறப்பு; போக்கு, இறப்பு. உயிர்கள் உலகில் பிறப்பதும் இறப்பதும் செய்வது சிவம் பெறுதற் பொருட்டாதலால், அச்சிவப் பேற்றுக்குப் பின் அவை வேண்டாமை “வரவு போக்கற்ற நிலை கூடும்” என யாப்புறுக்கின்றார். போக்கும் வரவும் சிவத்தொடு புணர்வதும் உயிர்கட்கேயுரிய; சிவத்துக்கில்லை என்பதுணர்த்தற்குப் “போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே*” (சிவபு) என மணிவாசகனார் மொழிவது அறிக. மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், விசுத்தி, அனாகதம், ஆக்ஞை என்ற ஆதாரபதம் ஆறும் கடந்து, ஆக்ஞைக்கு மேல் பன்னிரண்டங்குல உயரத்தில் உள்ளது சாந்த பதம்; இதனைத் துவாத சாந்த பதம் எனவும் சாந்தி பதம் எனவும் நூலோர் கூறுவர். சாந்த பதத்தை யோகத்தால் நோக்குவார்க்கு அமுத மயமான சந்திரன் தோன்றி அமுதம் பொழியும் எனத் தத்துவசித்தி என்னும் நூலார் உரைக்கின்றார். யோக சந்திரனாய் அமுதம் பொழிபவன் முருகன் என்றற்குத் “துதி வாய்மை பெறு சாந்த பதமேவு மதியமே” என உரைக்கின்றார். போரூர்ச் சிதம்பர சுவாமிகள், “மூலநிலத்தில் அதோ முகமாய் முகிழ்த்து விழியின்பொடு துயிலும், மூரிப் பாம்பைக் காலனலை மூட்டி யெழுப்பி நிலம் ஆறும் சீலமொடும் போய்த் தரிசித்துச் செழுமா மதியின் அமுத கடல் தேக்கி யகத்தங் கசைவறு மோர் தெய்வத் தவத்தோர்” (சன்னிதி. முறை-பிள்ளை-தாலப்) என அமுத சந்திர தரிசனம் பெறுவோரைக் குறிப்பது காண்க. உலகிலுள்ள ஒளிகளில் இருளுண்மையின், அஃது அறவே யில்லாத் தனியொளிப் பொருள் என்பது விளங்கத் “துரிசறு சுயஞ் சோதி” என்று சொல்லுகின்றார். தோகை, மயில். முருகனது துணையாந் தன்மையை “நல்ல துணை” என்பதன் மேற் சொல்லற்கு வேறு சொல்லில்லை என்பது விளங்கச் “சொல்லரிய நல்ல துணை” என்று சிறப்பிக்கின்றார்.
இதனால், பதி பூசையாகிய சிவ பூசையின் பயன் சிவப்பேறு என்பதை முருகன் மனத்துள் வந்து உணர்த்திய திறம் புலப்படுத்தவாறாம். (5)
|