50. சிற்பகல் மேவுமித் தேகத்தை யோம்பித்
திருவனையார்
தற்பகமே விழைந் தாழ்ந்தேன் தணிகை
தனிலமர்ந்த
கற்பகமே நின் கழல் கருதேனிக் கடைப்
படுமென்
பொற்பக மேவிய நின்னருள் என்னென்று
போற்றுவதே.
உரை: திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் கற்பகமே, சில நாட்களே வாழும் இத்தேகத்தை விரும்பிப் பேணித் திருமகள் போன்ற செல்வ மகளிர்பாற் பெறலாகும் காமக் கூட்டத்தில் மூழ்கி நின் கழலணிந்த திருவடியை நினையா தொழிந்து கீழ்மைப்படும் என் பொற்புடைய சிந்தைக்கண் எழுந்தருளிய நின்னுடைய திருவருளை என்னென்று போற்றிப் பரவுவேன், எ.று.
நிலையாமையை இயல்பாக வுடையதாகலின் “சிற்பகல் மேவும் இத்தேகம்” என்றும், இதனை நிலையாய தெனக் கருதி விரும்புவது அறிவுடைமை யன்று என்பது புலப்பட “இத்தேகத்தை ஓம்பி” என்றும் இயம்புகின்றார். செல்வமும் அழகுமுடைய மகளிரைத் “திருவனையார்” என்று குறிக்கின்றார். தற்பகம் - மகளிர் போகம். மனத்தால் விரும்பிச் செயல் வகையில் அப்போகத்தில் மூழ்கினேன் என்பார், “விழைந்து ஆழ்ந்தேன்” என்று கூறுகின்றார். வேண்டுவார் வேண்டுவது நல்குவது பற்றிக் “கற்பகமே” என்று புகல்கின்றார். இம்மரம் உடைமை பற்றித் தேவருலகு “கற்பக நாடு” எனவும் வழங்கும். முருகக் கடவுளின் திருவடியை நினையா தொழிந்தமைக்குக் காரணம் திருவனையார் தற்பகமே விழைந்து ஆழ்ந்தமை என்றதனால், “நின் கழல் கருதேன்” என்றும், அதனாற் கீழ்மை யுற்றேன் என்பார், “கடைப்படும்” என்றும் உரைக்கின்றார். கீழ்மைச் செயலாற் கடைப்பட்ட வுள்ளத்தை வெறுத் தொதுக்காது அருள் கூர்ந்து அதன்கண் எழுந்தருளிய திறம் வியந்து பரவுமாறு தோன்ற, “என் பொற்பகம் மேவிய நின்னருள் என்னென்று போற்றுவதே” எனப் பரவுகின்றார். பெருமான் எழுந்தருளும் பேறுடைமை கண்டு, கடைப்படும் மனத்தை, இகழாமல், “பொற்பகம்” எனச் சிறப்பிக்கின்றார். பொற்பு - திருவருட் பொலிவு.
இதனால், தமது தீச் செயற்குத் துணை புரிந்தமை கண்டும் வெறுக்காமல் தம்முடைய மனத்தின்கண் எழுந்தருளிய முருகக் கடவுளின் அருள் நலத்தை வியந்தவாறாம். (50)
|