500.

    தேடுங் கிளிநீ நின்னை விளம்பித் திருவன்னார்
    ஆடுந் தணிகையில் என்னுயி ரன்னா ரருகேபோய்க்
    கூடும் தனமிசை யென்பெயர் வைத்துக் கோதைக்கே
    ஈடுங் கெடவின் றென்னையு மீந்தரு ளென்னாயே.

உரை:

     என்னைத் தேடித் திரிகின்ற கிளியே, திருமகள் போலும் உருவுடைய மகளிர் நடம் புரியும் தணிகைப் பதியில் எழுந்தருளும் எனக்கு உயிர் போன்றவராகிய முருகப் பெருமான் அருகிற் சென்று, நின்னை இன்னாரென விளங்கச் சொல்லி, “என்னைக் கூடி மகிழ்கின்ற நின்னுடைய தலைவியின் கொங்கை மேல் என் பெயரை எழுதி வைத்து அவட்கு நிகர் எவரும் இல்லையாமாறு இப்பொழுதே அவட்கு என்னை ஈந்தேன்” என்று சொல்லப் பண்ணுவாயாக, எ. று.

     தான் வளர்க்கின்ற கிளி இங்குமங்கும் திரிந்து விட்டுப் பின் அவள் பால் வந்தமை கண்டு உள்ளத் தெழுந்த உவகையால், கையிலேந்தித் தலையையும் இறகுகளையும் தடவிக் கொடுத்து அதனோடு சொல்லாடுகின்ற பெருந்திணை நங்கை, என்னைத் “தேடுங் கிளியே” என முற்பட அழைத்து, நீ தணிகை முதல்வனான முருகப் பெருமானிடம் சென்று வரவேண்டுமென்று சொல்லி, அங்கே உன்னைப் போற் பல கிளிகள் வந்திருக்குமாதலால், நீ உன்னை இன்னாரென முதற்கண் தெரிவித்துக் கொள்ள வேண்டும் என்பாள், “நின்னை விளம்பி” என வுரைக்கின்றாள். தணிகையை நினைந்தவுடன், அதன் சிறப்பு மனக்கண்ணில் எழுதலால், திருமகள் போல உருவும் திருவுருமுடைய மகளிர் கூடி நடம் புரியும் காட்சி தோன்றுதலால், “திருவன்னார் ஆடும் தணிகை” என்று சொல்லி அக்காட்சியை மாற்றுகின்றாள். அங்குள்ள முருகப் பெருமானுக்கும் தனக்குமுள்ள தொடர்பு கூறலுற்றவள், “என்னுயிரன்னார்” என்று மொழிகின்றாள். இத் தொடர்பால் நின்னை அன்புடன் உன்னை அருகில் வரவிடுவர்; நீயும் அவர் அருகே தயங்காமற் செல்க என்பாளாய், “அருகே போய்” எனவும், “ஐய, என் தலைவி மார்பைக் கூடுகிற நீ அதன்கண் உன் காதலன்பும் உறவும் விளங்க அங்கு எழுதப்படும் சந்தனத் தொய்யிலில் உன் பெயரை எழுதுதல் வேண்டும்; அதனை நீயே எழுதுகிறாயா? எழுதி வைக்கச் சொல்லுகிறாயா? என வுரைத்து அவர் திருவாயால் விடை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பாளாய், “கூடும் தனமிசை என் பெயர் வைத்து” எனவும், நீ தர என் தலைவி யணிந்துள்ள பூங்கோதை பொதுவாகிய கடம்பின் பூங்கோதை தானே, சிறப்பாக, அவட்கு நிகர் வேறு இல்லை என்னுமாறு என்ன தருகிறாய் என்று பேசி, அவர் எனக்குத் தன்னையே தருகிறேன் என்று சொல்லுமாறு பண்ண வேண்டும்; அதனையும் இப்பொழுதே தருவதாக உரைக்கும் சொல்லைப் பெற்றுக் கொண்டு இங்கே வந்து எனக்கு உரைப்பாயாக என்பாளாய், அக் “கோதைக்கே ஈடும் கெட இன்று என்னையும் ஈந்தருள் என்னாயே” எனவும் கூறுகின்றாள். இது கலவிக் காலத்து உரையாதலின் பல சொற்கள் இடையிற் பெய்துரைக்க அமைந்துள்ளது. இவற்றின் இயல்புகளைச் சீவக சிந்தாமணியில் ஊடலும் கூடலும் கூறுமிடத்துக் காண்க.

     இதனால், கூட்டத்தில் நிகழ்வன கிளிக்குரைத்துப் பெருந்திணை நங்கை பேசுமாறாம்.

     (8)