501. பொன்னை யிருத்தும் பொன்மல ரெகினப் புள்ளேநீ
அன்னை யிகழ்ந்தே யங்கலர் செய்வான் அனுராகம்
தன்னை யளிக்கும் தண்டணி கேசர் தம்பாற்போய்
என்னை யிகழ்ந்தா ளென்செயல் கொண்டாள் என்பாயே.
உரை: திருமகளைத் தன்பால் வீற்றிருக்கச் செய்யும் பொற்றாமரை மலரில் இருக்கும் அன்னப் பறவையே, நற்றாய் அறிந்து அயல் மகளிர் கண்டு அவர் கூறுமாறு காமநோயை விளைவிக்கும் குளிர்ந்த தணிகை மலைத் தலைவனாகிய முருகப் பெருமானிடம் போய், எனக்கு அன்னையாகிய தலைவி என்னை வெறுத்துப் புறம் போக்கிவிட்டாள்; என்னைப் போல் இல்லின்கண் சிறைவைக்கப் பட்டுள்ளாள் என்று சொல்லுக, எ. று.
பொன், திருமகட்குப் பெயர். பொன்னின் நிறமுடையவளாதலால் திருமகளைப் பொன் னெனவும், பொன்னி யெனவும் வழங்குவர். பொன் மலர், ஈண்டுப் பொற்றாமரை மேற்று. பொற்றாமரை - அழகி்ய தாமரை. திருமகள் செந்தாமரை மலரில் வீற்றிருப்பது பற்றிப் “பொன்னை யிருத்தும் பொன்மலர்” என்றும், அத் தாமரையில் அன்னப்பறவை வைகுவது கொண்டு, “பொன்மலர் எகினப் புள்ளே” என்றும் உரைக்கின்றாள். அன்னை - தலைவியைப் பெற்ற தாய்; இவளை நற்றாய் என்றலும் வளர்ப்பவளைச் செவிலித்தாய் என்றலும் வழக்கு. மறைந்த ஒழுக்கத்தை அறிந்தாய்ந்து ஆவன செய்பவள் செவிலியும், இடித்து அறிவுரைத்து இல்வரை நிறுத்துபவள் நற்றாயுமாதலால், இங்கு அன்னை யென்பது நற்றாய்க் காயிற்று, தலைவி முருகன்பாற் காதற் காமமுற்றது தெரிந்து சினமுற்று மனைக்குப் புறத்தே போக விடாது அகத்தே இருப்பிக்கின்றாளாதலின், “அன்னை இகழ்ந்து” எனவும், அயல் மகளிர் அறிந்து பழிப்பதற்கு நாணுவது கொண்டு, “அங்கு அலர் செய்வான்” எனவும், இந்நிலைமை யுண்டாதற்குக் காரணம் முருகனால் உளதாகிய காம நோய் என்பாள், “அனுராகம் தன்னை யளிக்கும் தண்டணிகேசர்” எனவும் இயம்புகிறாள். அனுராகம் - காமவிச்சை. தாய்பாற் கொண்ட சினத்தாலும், தன்னுள்ளத் தொழுந்த வெறுப்பாலும் என்னைக் கூட்டில் இருக்க விடாது புறத்தே போக்கி விட்டாள் என்றற்கு, “என்னை இகழ்ந்தாள்” எனவும், நான் இதுகாறும் கூட்டில் சிறைப்பட்டிருந்தது போல அவள் இற்செறிக்கப் பட்டாள் என்பாளாய், “என்செயல் கொண்டாள்” எனவும், இவற்றைத் தணிகைக்குப் போய் முருகப் பெருமானிடம் முறை யிடுக என்றற்கு, “என்பாய்” எனவும் கூறுகின்றாள்.
இதனால் முருகனிடம் அன்னப்புள்ளைத் தலைவி தூது விடுத்தவாறாம். (9)
|