502.

    வதியும் தணிகையில் வாழ்வுறு மென்கண் மணியன்னார்
    மதியுந் தழல்கெட மாமயில் மீதிவண் வருவாரேல்
    திதியும் புவிபுகல் நின்பெயர் நெறியைத் தெரிவிப்பான்
    நதியுந் துணவுத வுவனங் கொடிநீ நடவாயே.

உரை:

     அழகிய காக்கையே, உனது இனம் மிக்கு வாழும் தணிகைப் பதியில் எழுந்தருளும் என் கண்மணி யன்ன முருகப்பெருமான், திங்களின் நில வொளியால் உண்டாகிய வெப்பம் கெடுமாறு அழகிய மயில் இவர்ந்து இங்கு வருகுவராயின், நிலை பெறும் நிலவுலகர் காக்கை யென்று நின் பெயரைக் கூறுதற் கொப்ப அதன் பொருள் நெறியைத் தெரிவிக்கும் வகையில் நீ நடந்து காட்டுக; உனக்கு நதி நீரை எதிரேறிக் காட்டும் மீனுணவு தந்துதவுவேன், எ. று.

     கொடி-காக்கை. காக்கையை நோக்கிக் கூறுவதால் “வதியும்” என்பதற்குக் காக்கை யினம் மிகக் கூடி வாழும் தணிகை யென்று பொருள் காணப்பட்டது. “மாக்குணங்க ளஞ்சாற் பொலியும் நலச் சேட்டைக் குலக் கொடியே” என்று திருக் கோவையார் (235) உரைப்பது காண்க. வதிதல் - தங்குதல். உயிர்க் காதலனைக் கண்மணி யன்னான் என்பது பண்டை நாளிலிருந்தே வரும் சொல் வழக்காகும். மாதவி தான் கோவலற் கெழுதிய திருமுகத்தைக் கோசிக மாணிபாற் கொடுத்த போது, “கண்மணி யனையாற்குக் காட்டுக” (சிலப் 2-13-1975) என்று சொன்ன தாகச் சிலப்பதிகாரம் உரைப்பதால் அறியலாம். காதல் நோயால் வருந்துபவர்க்கு மாலை முழுத் திங்களின் தண்ணிய நிலவு பிரிவின்கண் வேட்கை வெம்மையை மிகுவித்தலும், கூடியிருக்குமிடத்துத் தண்ணிதாய் இன்பம் செய்தலும் இயல்பு என்பவாகலின் “மதியுந்து அழல்கெட மயில் மீது இவண் வருவாரேல்” என்று இசைக்கின்றாள். திதியும் புவி - படைக்கப்பட்டு உளதாகும் நிலவுலகம். உளதாய்க் காணப்படும் உலகத்தைத் “திதி” எனக் குறிப்பது மெய்கண்ட நூல் வழக்கு. நின் பெயர் - கொடி யெனப்படும் நினது காக்கை என்ற பெயர். நெறி யென்பது, காக்கும் நெறி. வருவா ரெனின் உயிர்வாழ்வேன்; அன்றாயின் வாழேனாதலால், எனது உயிரைக் காக்கும் நெறியில் நின்று கரைந் துரையாயாயினும், நடந்து தெரிவிப்பாயாக என்பாள், “நின் பெயர் நெறியைத் தெரிவிப்பான் நடவாய்” என மொழிகின்றாள். அது செய்வாயாயின், மீனுணவு தருவேன் என்பாள், வாயாற் சொல்ல விழையாமல், “நதியுந்து உணவு உதவுவன்” என நவில்கின்றாள். ஆற்று நீர் ஓடும் போது மீனினம் எதிரேறிச் செல்லும் இயல்பு நோக்கியும், அது சில புள்ளினங்கட்கே யன்றி மக்களினத்திற் பலர்க்கு உணவாதலை யெண்ணியும், “நதியுந்து உணவு” என்கின்றார். காக்கை கரைந்தால் பிரிந்த அன்பர் வருவரெனக் கருதுவது பண்டை நாளை வழக்கு. “விருந்து வரக் கரைந்த காக்கை” (குறுந். 210) என்று சான்றோர் கூறுப. “அன்பர் வருவாராயின் நடந்து காட்டு; வாராராயின் பறந்து காட்டு” என்பது இந்நாளையோர் வழக்கு.

     இதனால் முருகனது வரவெண்ணிய தலைவி காக்கையைப் பராவியவாறாம்.

     (10)