48. போற்றித் திருவிருத்தம்
அஃதாவது போற்றி என்ற சொற் கொண்டு முடியும் விருத்தப் பாட்டுக்களானாகிய பதிகம் என்பது. வணக்கம் என்ற பொருளில் வரும் நம, நமோ என்ற வடசொல் புகுதற்கு முன்பே தமிழ்ச் சான்றோர் இறைவன் திருப்பெயர் ஒவ்வொன்றின் இறுதியிலும், சண்முகா போற்றி, சாமியே போற்றி, குகனே போற்றி, குருபரா போற்றி என்றாற் போலப் பரவுவது வழக்கம். திருநாவுக்கரசர் அருளிய போற்றித் திருத் தாண்டகமும், திருவாதவூரர் அருளிய போற்றித் திருவகவலும், பதிகங்களும் தொன்மைக்கும் சிறப்புக்கும் சான்றாக விளங்குகின்றன. இதன்கண் முருகனுடைய அருமை பெருமைகளையும் குணஞ் செயல்களையும் சுருங்கிய சொற்றொடர்களால் ஓதிப் போற்றி செய்வது காணலாம். போற்றி என்பது, காத்தற் பொருளில் வரும் போற்றல் வினையின் இகரவீற்று வியங்கோள்; “பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி” (சிலப். புறஞ்சேரி: 92) என்று இளங்கோவடிகள் வழங்குவது காண்க.
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 505. கங்கையஞ் சடைசேர் முக்கட்
கரும்பருள் மணியே போற்றி
அங்கையங் கனியே போற்றி
அருட்பெருங் கடலே போற்றி
பங்கையன் முதலோர் போற்றும்
பரம்பரஞ் சுடரே போற்றி
சங்கைதீர்த் தருளும் தெய்வச்
சரவண பவனே போற்றி.
உரை: கங்கை தங்கிய சடையையும் முக்கண்ணும் உடைய கரும்பொத்த சிவபெருமானுக்கு மகனே போற்றி; அகங்கையிற் கொண்ட நெல்லிக் கனி போன்றவனே, திருவருளே நிறைந்த பெரிய கடலே, தாமரையில் இருக்கும் பிரமன் போற்றுகிற மேன்மேலாகிய சுடரொளியே, மனத்தில் எழும் ஐயங்களைப் போக்கி யருளும் சரவணபவனே போற்றி போற்றி, எ. று.
கரும்பு ஒப்பது பற்றிச் சிவனைக் கரும்பெனவும், கரும்பின் கணுவிற் பிறக்கும் மணி போல்வது பற்றி முருகனை மணியெனவும் போற்றுகின்றார். அணிமையில் ஐயம் திரிபின்றிக் காண வுள்ள பொருளை, “அங்கை நெல்லிக்கனி போல வுளது” என்னும் உலகுரையை மேற்கொண்டு, “அங்கையங் கனியே” என்றும், வற்றாத அருளுடைமை கருதி, “அருட் பெருங் கடலே” என்றும் புரவுகின்றார்; பங்கயன் எனற்பாலது, பங்கையன் என எதுகை நோக்கித் திரிந்தது. பரம் பரம் சுடரென்றது, மேன் மேலும் ஓங்கி நிற்கும் ஒளி என்றற்கு. நினைப்பவர் நினைவின்கண் உண்டாகும் ஐயங்களை நீக்கி யருளுகிறான் என்பது பற்றிச் “சங்கை தீர்த்தருளும் தெய்வச் சரவண பவனே” எனப் போற்றுகின்றார். சரவணபவன் - சரவணப் பொய்கையிற் பிறந்தவன். இதனை மானதப் பொய்கை என்றும், மானத சரோவம் என்றும் கூறுவர். சரவணம், ஒருவகைப் புல் லென்பவரும், தருப்பைப் புல்லென்பவரும் எனப் பலர் உளர். போற்றி என்ற சொல்லை இப்பாட்டிலும் ஏனைப் பாட்டுக்களிலும் இடநோக்கிச் சேர்த்துக் கொள்க. (1)
|