507.

    மணப்புது மலரே தெய்வ வான்சுவைக்
        கனியே போற்றி
    தணப்பற அடியார்க் கின்பம் தருமொரு
        தருவே போற்றி
    கணப்பெருந் தலைவ ரேத்தும் கழற்பதத்
        தரசே போற்றி
    குணப்பெருங் குன்றே போற்றி குமரசற்
        குருவே போற்றி.

உரை:

     மணம் நிறைந்த புது மலர் போன்றவனே, தெய்வமாகிய பெரிய சுவை நிறைந்த கனியே, நீங்குதல் இல்லாத இன்பத்தை அடியவர்க்கு அளிக்கும் தேவதாருவே, தெய்வ கணங்கட்குத் தலைவரெல்லாம் வணங்கும் திருவடியை யுடைய அருளரசே, குணமெல்லாம் திரண்ட பெரிய குன்றமே, குமரக் கடவுளாகிய சற்குருவே போற்றி போற்றி, எ. று.

     புது மலரின்கண் நறுமணம் நிறைந்திருப்பது இயல்பாதல் போல முருகன்பால் தெய்வ மணம் நிறைந்துள்ளமை தோன்ற, “மனப் புது மலரே” என மொழிகின்றார். “மணங்கமழ் தெய்வத் திளநலம் காட்டி” (முருகு) என்று நக்கீரர் உரைப்பர். தெவிட்டாத இன்சுவைக் கனி போல்பவனாதலால், “தெய்வ வான் சுவைக் கனி” என்கின்றார். தணப்பு - நீக்கம். அடியார்க்கு நீக்கமில்லை யாதலால் தணப்பற இன்பம் தரும் தருவே என இயைக்கப் பட்டது. தரு - தேவதாரு என்னும் மரம்; கற்ப தரு எனினும் அமையும். கணம் - தேவர் கணம். கழற் பதம் - கழல் அணிந்த திருவடி. குமாரப் பருவத்தேயே சிறந்த ஞான குருவாய் விளக்க முற்றமை பற்றிக் “குமர சற்குருவே” என்று கூறுகிறார்.

     (3)