509. மூவடி வாகி நின்ற முழுமுதற்
பரமே போற்றி
மாவடி யமர்ந்த முக்கண் மலைதரு
மணியே போற்றி
சேவடி வழுத்தும் தொண்டர் சிறுமைதீர்த்
தருள்வோய் போற்றி
தூவடி வேற்கைக் கொண்ட சுந்தர
வடிவே போற்றி.
உரை: மூன்று வகை வடிவுடையனாய் நின்றருளும் முழு முதற் பரம் பொருளே, மாமரத்தின் கீழிருந்த மூன்று கண்களையுடைய மலை போன்ற சிவபெருமான் அருளும் மாணிக்க மணியே, திருவடியை நாளும் வணங்குகின்ற தொண்டர்கட் குண்டாகும் குற்றங்களை நீக்கி யருளும் பெருமானே, தூய கூரிய வேற்படையைக் கையில் ஏந்துகின்ற அழகிய உருவமுடையவனே போற்றி, போற்றி, எ. று.
உருவம், அருவம், அருவுருவம் என்ற மூன்றும் மூவடிவாகும். முழு முதற் கடவுட்கு இம் மூன்றும் வடிவம் என நூல்கள் கூறுவது காண்க. மா-மரம், காஞ்சிநகர்க் கண் மாமரத்தின் கீழே எழுந்தருளி உமையம்மைக்குக் காட்சி தந்தருளினான் சிவன் என்று புராணம் உரைப்பது காண்க. மணி பிறக்குமிடம் மலை யாதலால், “முக்கண் மலைதரு மணியே” என்று பாடுகிறார். “மலையிடைப் பிறவா மணியே என்கோ” (சிலப். 2 : 177) என்பது காண்க. செய்யும் குற்றங்களால் சிறுமை யுண்டாதலாற் குற்றத்தைச் “சிறுமை” எனக் குறிக்கின்றார். தன்னால் தாக்குண்டார் உள்ளத்தைத் தூய்மை செய்யும் தனிச் சிறப்புடைய தாகையால் முருகனது வேற்படையைத் “தூவடி வேல்” என்று புகழ்கின்றார். அழகே யுருவாயவன் என்பது பற்றி முருகனைச் “சுந்தர வடிவே” என்று துதிக்கின்றார். (5)
|