51.

    போற்றே னெனினும் பொறுத்திடல் வேண்டும்
        புவி நடையாம்
    சேற்றே விழுந்து தியங்கு கின்றேனைச்
        சிறிதுமினி
    ஆற்றே னெனதர சேயமுதே யென்
        அருட் செல்வமே
    மேற்றேன் பெருகு பொழில் தணிகாசல
        வேலவனே.

உரை:

     மேன்மேலும் தேன் பெருகித் துளிக்கும் பொழில்களை யுடைய தணிகை மலையை யுடையவனே, வேற்படை யுடையவனே, எனக்கு அரசனே, அமுதமானவனே, அருட் செல்வமே, உலக நடையாம் சேற்றில் அழுந்தி அறிவு மயங்கி இதுகாறும் நின்னைப் போற்றி வழிபடா தொழிந்தேன், இனிச் சிறிது போதும் ஆற்றேனாதலால், என் குற்றத்தைப் பொறுத்தருள வேண்டுகிறேன், எ. று.

     மேன்மேலும் ஊறிப் பெருகும் தேனை, “மேற்றேன் பெருகும்” எனவும், கற்குன்றாயினும் பொழில் சூழ்ந்திருப்பதுணர்த்தற்குப் “பொழில் தணிகாசல” எனவும் இயம்புகிறார். புவி நடை - மண்ணியல் வாழ்வு. “மண்ணுளே திரியும் போது வருவன பலவும் குற்றம்” (நனிபள்ளி) என்பவாகலின், “புவி நடையாம் சேறு” என இழித்துரைக்கின்றார். சேற்றில் வீழ்ந்து சிக்குண்டார் கரையேற மாட்டாது அறிவு கலங்குவது போலப் புவிநடையிற் சிக்கி வருந்துகிறேன் என்பார், “புவிநடையாம் சேற்றே விழுந்து தியங்குகின்றேன்” என்று கூறுகிறார். ஐ, சாரியை. தியங்குதல் - அறிவு மருளுதல். குற்றமாவது அறிந்த பின் அதன்கண் நீட்டித் திருக்கப் பொறேன் என்பார், “இனிச் சிறிதும் ஆற்றேன்” என்றும், என்னைப் பொறுத் தருள வேண்டும் என்பாராய்ப் “பொறுத்திடல் வேண்டும்” என்றும் வேண்டுகின்றார். அரசே, அமுதே என்பன முதலாயின ஆர்வ மொழி. வேற்படை, முருகப் பெருமானுக்குச் சிறப்புடைய படை. அதனால் “வேலவனே” எனப் புகழ்வது மரபாயிற்று. “அங்கை வேலோன் குமரன்” (ஓணகாந்தன்) என நம்பியாரூரர் புகன்றுரைப்பது காண்க.

     இதனால், புவி நடையாம் துன்பச் சேற்றிலழுந்தி நின்னைத் தெளிந்து போற்றா தொழிந்தேனைப் பொறுத்து அருள வேண்டுமென முறையிட்டவாறாம்.

     (51)