510. விண்ணுறு சுடரே என்னுள்
விளங்கிய விளக்கே போற்றி
கண்ணுறு மணியே யென்னைக்
கலந்த நற்களிப்பே போற்றி
பண்ணுறு பயனே என்னைப்
பணிவித்த மணியே போற்றி
எண்ணுறு மடியார் தங்கட்
கினியதெள் ளமுதே போற்றி.
உரை: வானத்தில் விளங்குகின்ற ஒளிப் பொருளே, என்னுள்ளத்தில் இருந்து விளங்குகின்ற விளக்கமே, கண்ணிடத்தே யுள்ள கருமணியே, என்னைக் கலந்துள்ள நல்ல இன்பமே, பண்ணிசையால் உண்டாகும் பயனானவனே, உன்னைப் பணிந்து ஒழுகுமாறு பண்ணிய மணியே, எப்பொழுதும் நினைந்து கொண்டுறையும் அடியார்களுக்கு இனிய தெளிந்த அமுதமே, போற்றி, போற்றி, எ. று.
வானத்தில் திகழ்கின்ற ஞாயிறு திங்கள் விண்மீன்கள் அனைத்தும் ஒளி செய்தற்குக் காரணமாக மூலவொளிப் பொருளாதலால், காரணத்தைக் காரியமாகவும், காரியத்தைக் காரணமாகவும் உரைக்கும் உபசார வழக்குப் பற்றி, “விண்ணுறு சுடரே” என்றும், உள்ளத்தில் ஞானமாய் விளங்குவதும் அதுவே யாதலால், “என்னுள் விளங்கிய விளக்கே” என்றும் விளம்புகிறார். கண்ணுறு மணி - கண்ணின் மணி. உள்ளத்திற்றோன்றும் இன்பம் ஊனிலும் உடம்பிலும் எங்கும் கலந்து நின்று உள்ளும் புறமும் பரந்து வெளிப்படுவதால், “என்னைக் கலந்த நற்களிப்பே” என வுரைக்கின்றார். பண்ணிசை செவி வழியாக உள்ளத்திற் பாய்ந்து உவகைச் சுவை தோற்றுவித்து இன்ப நுகர்ச்சியை விளைவிக்கும் திறம் கண்டு, “பண்ணுறு பயனே” எனக் கூறுகிறார். பண்ணின் பயன் நல்லிசை யென்பர் சேக்கிழார் (சண்டே); அதன் உள்ளுறு நற்பயன் இறை யின்பமாதல் தோன்றப் “பண்ணுறு பயனே” என வள்ளலார் கூறுவது காணலாம். யார்க்கும் பணிவின்றி இளமையில் அஞ்சாது திரிந்தொழுகிய தமக்குப் பணிவும் பண்பமைந்த ஒழுக்கமும் எய்துவித்த திருவருளை யெண்ணி, “என்னைப் பணிவித்த மணியே” எனப் பகர்கின்றார். எண்ணுறும் அடியார் - எண்ணுதல் மிகுகின்ற அடியார். “உருகுவார் உள்ளத்து ஒண்சுடர் தனக்கென்றும் அன்பராம் அடியார்கள் பருகும் ஆரமுது” (கோட்டூர்) என ஞானசம்பந்தர் கூறுவதால் வள்ளற் பெருமான், “அடியார் தங்கட் கினிய தெள்ளமுதே” என இசைக்கின்றார். ஞானசம்பந்தர் உரைக்கும் கருத்திரண்டும் இவ் வருட்பாவின் கண் உள்ளுறையாய் அமைந்திருப்பது காண்க. (6)
|