511. மறையெலாம் பரவ நின்ற
மாணிக்க மலையே போற்றி
சிறையெலாம் தவிர்ந்து வானோர்
திருவுறச் செய்தோய் போற்றி
குறையெலா மறுத்தே யின்பம்
கொடுத்தவென் குருவே போற்றி
துறையெலாம் விளங்கு ஞானச்
சோதியே போற்றி போற்றி.
உரை: எல்லா வேதங்களும் பராவி வழிபடும் மாணிக்கமலை யனையானே, தேவர் சிறை நீக்கி அவர்கள் இன்ப வாழ்வுறச் செய்தவனே, எங்கள் குறை யெலாம் போக்கி எங்கட்கும் இன்ப வாழ்வளிக்க வந்த குருபரனே, வாழ்வில் துறைதோறும் சூழ்கின்ற இருள் அறுத்து ஒளி வழிகாட்டும் ஞான ஒளிச் சோதியே போற்றி, போற்றி, எ. று.
எல்லா வேதங்களும் துதித்து வழிபட ஏற்ற மெய்தி விளங்குவது தோன்ற, “மறை யெலாம் பரவ நின்ற மாணிக்க மலையே” என்று கூறுகிறார். வேதங்களில் சிறப்புடையனவும் இல்லனவும் இருவேறு வகை யுண்மையால், “மறை யெலாம்” என மொழிகின்றார். இருக்கு முதலிய மூன்றும் சிறப்புடையவை; அதர்வம் சிறப்புடைய தன்று என வைதிகர் உரைப்பர். அசுரர் கூட்டம் ஒழிந்த போது சிறை பட்டிருந்த தேவர் பலரும் அச் சிறைத் துன்பத்தின் நீங்கி இன்ப வாழ்வு பெற்றது நினைந்து, “சிறை யெலாம் தவிர்ந்து வானோர் திருவுறச் செய்தோய்” எனக் கூறுகிறார். இவ்வாறே உலகம் இன்ப வாழ்வு பெற இராமனைப் பெற்றாள் கோசலை என்று சொல்ல வந்த கம்பர், “திருவுறப் பயந்தனள் திறங்கொள் கோசலை” (கம்ப. பால. திருவவ) என்பது காண்க. குறையில் துன்பமும் நிறைவில் இன்பமும் உறுதலால், “குறையெலாம் அறுத்தே இன்பம் கொடுத்த என் குருவே” என்கிறார். குறை தீர்த்தல் இருள் நீக்கம் போறலின், “குருவே” எனல் பொருத்தமாம். குரு என்ற சொற் பொருள் இருளை நீக்குபவன் என்பது. தொழில் வகையும் அவற்றின் துறை வகைகளும் காலமும் இடமும் நோக்கி வளர்தற் கேற்ற, ஞானம் நல்குபவன் இறைவனாதல் விளங்கத் “துறையெலாம் விளங்கும் ஞானச் சோதியே” என வுரைக்கின்றார்; ஞானசம்பந்தர், “துறையவன் தொழிலவன் தொல்லுயிர்க்கும்” (மாற்பேறு) என்பது காண்க. (7)
|