512.

    தாருகப் பதகன் தன்னைத் தடிந்தருள்
        செய்தோய் போற்றி
    வேருகச் சூர மாவை வீட்டிய
        வேலோய் போற்றி
    ஆருகச் சமயக் காட்டை அழித்தவெங்
        கனலே போற்றி
    போருகத் தகரை யூர்ந்த புண்ணிய
        மூர்த்தி போற்றி.

உரை:

     தாருகன் என்ற அசுரப் பாதகனைக் கொன்று யாவருக்கும் அருள் புரிந்தவனே, வேரோடே கெடும்படிச் சூரனாகிய மாமரத்தைப் பிளந்து வீழ்த்திய வேற்படையை யுடையவனே, ஆருகத மெனப்படும் சமணர் சமயமாகிய காட்டை யெரித்த நெருப்பே, போரால் உயர்ந்து வந்த ஆட்டை ஊர்தியாகக் கொண்டு ஏறின புண்ணிய மூர்த்தியே, போற்றி, போற்றி, எ. று.

     தாருகன், இவனைத் தாரகன் என்பது முண்டு. இவன் கிரவுஞ்ச மலையில் ஒரு பகுதியில் நகர மமைத்து அங்கே யிருந்து கொண்டு அசுரரல்லாத பிறர்க்குத் தீங்கு புரிந் தொழுகியவன்; அவனோடு போராடி அவன் மார்பையும் அவனிருந்த கிரவுஞ்ச வெற்பையும் தன் வேற் படையாற் பிளந் தெறிந்த வரலாற்றைத் “தாருகப்பதகன் தன்னைத் தடிந்தருள் செய்தோய்” என்று கூறுகின்றார். தாருகன் பாதகம் பலவும் செய்பவனாதல் தெரிந்து, “தாருகப் பதகன்” எனக் குறிக்கின்றார். பதகன் - பாதகன். தடித்தல்-வெட்டிக் குறைத்து வீழ்த்துதல் சூரமா - சூரனாகிய மாமரம். முருகன் செய்யும் போர்த் திறங் கண்டு பேரச்சம் கொண்ட சூரவன்மா, ஒரு பெரிய மாமர வுருக்கொண்டு நின்றானாக, அதனைத் “தாதவிழ் நீபத்தாரோன் உய்த்திடு தனிவேல் முன்னர் ஒரு தனி மரமாய் நின்றான்” (யுத்த. சூரவதை) என்று கந்தபுராணம் கூறுகிறது. அம் மாமரத்தை வேற்படை தாக்கிப் பிளந்த காலை அதன் உள்ளுறையாய் நின்ற சூரவன்மா இரு கூறாகி ஒரு கூறு சேவலும் ஒரு கூறு மயிலுமாய் அசுரத் தன்மை நீங்கி முருகப்பெருமானுக்கு முறையே கொடியும் ஊர்தியுமாயினான் எனப் புராணம் உரைக்கிறது. சினேந்திரனுக்கு அருகன் எனவும் அருகபரமேட்டி எனவும் பெயருண்மையால், அப் பரமேட்டியின் நெறி நிற்பவரைச் சயின ரென்பதோடு, அருகர் ஆருகதர் என்றெல்லாம் வழங்குப. அருகர், ஆருகர் என நீண்டது. சயின சமயம், ஆருகச் சமயம் எனவும் வழங்கப் பட்டது. அது திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் ஆகிய இருவர் காலத்தில் அரசியற் செல்வாக் கிழந்து தேய்ந்து போயிற்று. தமிழ் நாட்டில் புதியவாய்ப் புகுந்த பவுத்தம், ஆருகதம், இஸ்லாம், கிறித்துவம் என்பன வற்றுள் அரசியற் செல்வாக்கும் ஆதரவும் பெற்றவையே நிலைபேறு கொண்டிருப்பது நோக்கத் தக்கது. மக்களாட்சி தோன்றி விட்டமையின், சமயங்களின் நிலை யாதாம் என்பதை எதிர்கால வரலாறு தான் கண்டறிந்து கூற வல்லதாம். நாரத முனிவன் யாகத்தில் தோன்றிய ஒரு செந்நிற ஆடு தன்னினத்தையே யாகத்திற் கொல்கின்றனர் என்று வெகுண்டது போல அருகிருந்தவரையும் பிறரையும் தாக்கியதால் முருகன் அதனைப் பற்றிக் கொணர்வித்துத் தனக்கு ஊர்தியாகக் கொண்டானென்று புராணம் கூறுவது பற்றிப் “போருகத் தகரை யூர்ந்த புண்ணிய மூர்த்தி” என்று புகழ்கின்றார். போருக என்றவிடத்து உகப்பு, உயர்வு குறித்த தென அறிக. போர்முகத் தகர் என்பது பாடமாயின், போருடற்றி வந்த ஆடு எனப் பொருள் கொள்க. புண்ணிய மூர்த்தி - புண்ணியத்தின் வடிவாயவன்.

     (8)