513. சிங்கமா முகனைக் கொன்ற திறலுடைச்
சிம்புள் போற்றி
துங்கவா ரணத்தோன் கொண்ட துயர்தவிர்த்
தருள்வோய் போற்றி
செங்கண்மான் மருக போற்றி சிவபிரான்
செல்வ போற்றி
எங்களா ரமுதே போற்றி யாவர்க்கும்
இறைவ போற்றி.
உரை: சிங்கமுகன் என்ற அசுரனைக் கொன்ற வலிமிக்க சரபமே, உயர்ந்த வெள்ளை யானையையுடைய இந்திரனுக் குண்டான இடுக்கணைப் போக்கினவனே, சிவந்த கண்களையுடைய திருமாலுக்கு மருமகனே, சிவபெருமானுக்குச் செல்வ மகனே, எங்கட்குப் பெறலரிய அமுதமே, யாவர்க்கும் இறைவனே போற்றி, போற்றி, எ. று.
சிங்க முகன், சூரவன்மாவுக்குத் தம்பி; பேராற்றலும் பெருவலியும் உடையவன். சிம்புள் என்பது, சிங்கத்தை எளிதாகக் கொல்ல வல்ல பறக்கும் விலங்கு. இரணியனைக் கொன்ற நரசிங்க மூர்த்தியின் மத வெறியைச் சிவன் சிம்புளுருவில் வென்றடக்கினான் என உபதேச காண்டம் என்ற சைவநூல் கூறுகிறது. சிம்புளைச் சரபம் எனவுரைப்பர். துங்கம் - உயர்வு. வாரணம் என்றது, இந்திரன் ஊர்தியாகிய வெள்ளை யானை. இந்திரன் மகன் சூரவன்மன் முதலாய அசுரர் கைப்பட்டுச் சிறைப்பட்டு எய்திய துன்பத்தை முருகப் பெருமான் அசுரரை வென்று இந்திரன் மகனைச் சிறைவீடு செய்து துயர் நீக்கியருளிய வரலாறு நினைந்து, “வாரணத்தோன் கொண்ட துயர்தவிர்த் தளித்தோய்” என்று சொல்லுகின்றார். திருமாலுக்குக் கண்கள் இயல்பாகவே சிவந்த செந்தாமரை போல் இருப்பது பற்றிச் செங்கண் மால் எனப்படுகின்றான் என்று பரிபாடல் உரை கூறுகின்றது (பரி. 4 : 10). அடியவர்களாகிய எங்கட்கு அரிய அமுதமாவதே நன்றி ஏனையோர் யாவருக்கும் இறை புரிந்தருளும் இறைவன் என்பார், “இறைவ” என்கின்றார். (9)
|