514.

    முத்தியின் முதல்வ போற்றி
        மூவிரு முகத்த போற்றி
    சத்திவேற் கரத்த போற்றி
        சங்கரி புதல்வ போற்றி
    சித்திதந் தருளும் தேவர்
        சிகாமணி போற்றி போற்றி
    பத்தியின் விளைந்த இன்பப்
        பரம்பர போற்றி போற்றி.

உரை:

     முத்தியுலகிற்கு முதல்வனே, ஆறு முகங்களை யுடையவனே, சக்தி யெல்லா முடைய வேலைக் கையில் ஏந்துபவனே, உமா தேவிக்கு மகனே, சித்தி யெல்லாம் அளிக்கும் பெருமானே, தேவர்கட்கு முடி மணியாய்த் திகழ்பவனே, பத்தர்களின் பத்தி காரணமாகப் பிறக்கும் இன்பமே, பரம்பரனே போற்றி, எ. று.

     முத்தி - பிறவா வாழ்க்கைப் பேரின்ப நிலையம்; அதனைச் சங்கச் சான்றோர் “வாரா வுலகம்” (புறம்) என்பர். அதற்கு முதலும் தலைவனும் முருகன் என்றற்கு, “முத்தியின் முதல்வ” என்று கூறுகிறார். எல்லா அண்டங்களையும், உலகங்களையும் பொருள்களையும் அழித்தொழிக்கும் ஆற்ற லெல்லாம் தன்கண் குறைவறக் கொண்ட வேல் என்றற்குச் “சத்தி வேல்” எனப் படுகிறது. சகல வுலகங்களையும் அழிக்கும் கடவுளாற் கொடுக்கப்பட்ட தென்பதை மறந்து உலகருள் சத்தியாகிய உமாதேவியாற் கொடுக்கப்பட்ட தெனச் சிலர் கூறுவர். “ஆயதன் பின்னர் ஏவில் மூதண்டத் தைம்பெரும் பூதமும் அடுவது, ஏயபல் லுயிரும் ஒருதலை முடிப்பது ஏவர்மேல் விடுக்கினும் அவர்தம் மாயிரும் திறலும் வரங்களும் சிந்தி மன்னுயி ருண்பது எப்படைக்கும், நாயக மாவது ஒருதனிச் சுடர்வேல் நல்கியே மதலைகைக் கொடுத்தான்” (விடை. பெறு. 38) என்று கந்தபுராணம் உரைப்பது காண்க. சித்தி - சிந்தையில் எழும் ஆசை வகை; அணிமா மகிமா முதலிய எண்வகைச் சித்திகளையும் கொள்ளலாம். தேவர்கள் முடிமேற் கொள்ளும் மணி, தேவர்சிகாமணி. பத்தி, முத்தி யின்பத்துக் கேதுவாதலின், “பத்தியின் விளைந்த இன்பம்” என்றும், மிக மிக மேலாய பொருள் எனற்குப் “பரம்பரம்” என்றும் கூறுகின்றார்.

     (10)