515.

    தெருளுடை யோர்க்கு வாய்த்த
        சிவானந்தத் தேனே போற்றி
    பொருளுடை மறையோ ருள்ளம்
        புகுந்தபுண் ணியமே போற்றி
    மருளுடை மனத்தி னேனை
        வாழ்வித்த வாழ்வே போற்றி
    அருளுடை யரசே யெங்கள்
        அறுமுகத் தமுதே போற்றி.

உரை:

     தெளிவுடைய அறிஞர்க்குக் கிடைத்த சிவஞான இன்பம் தரும் தேனே, பொருள் நிறைந்த வேதங்களை யறிந்தோதும் நன்மக்களின் உள்ளத்தில் நிறைந்துறும் புண்ணிய வுருவே, மருள் நிறைந்த மனமுடைய என்னை இவ்வுலகில் வாழச் செய்த வாழ் முதலே, அருட் செல்வமுடைய அரசனே, ஆறுமுகங்களையுடைய அமுதமே போற்றி, போற்றி, எ. று.

     தெருள் - கல்வி கேள்விகளாலும் உண்மை யறிவாலும் உண்டாகும் உள்ளத்தெளிவு. இத் தெளிவுடையோர்க்குச் சிவஞானம் இனிது வாய்த்தலும், அதனால் ஞானவின்பம் தானே எய்தலும் கண்டு அவற்றை நுகர்விக்கும் காரணனாதலை யெண்ணித் “தெருளுடை யோர்க்கு வாய்த்த சிவானந்தத் தேனே” என்று போற்றுகின்றார். பொருளுடை மறையோர் - பொருளைத் தன்னகத்தே யுடைய மறைகளை யுணர்ந்து ஓதுபவர். நன் பொருள் காணும் உள்ளத்தில் புண்ணியம் புகுந்து நிறைவது பற்றி, “மறையோர் உள்ளம் புகுந்த புண்ணியமே” என்று கூறுகின்றார். பொருளல்லாத வற்றைப் பொருளாகக் கருதி யுழல்வது மருள். மருள் நிறைந்த மனம் அதனின் நீங்குதற்கு மண்ணிற் பிறந்து வாழ்தலல்லது வேறு வழி யில்லாமையால் வாழச் செய்யும் முதல்வனாதல் விளங்க, “மருளுடை மனத்தினேனை வாழ்வித்த வாழ்வே” என மொழிகின்றார். “தொழும்படி யோங்கள் மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே” (பள்ளி) என மாணிக்க வாசகர் உரைப்பது காண்க. அருளே பொருளாக வுடைய அரசு, அருளுடையரசு. அமுதம் போல்வதால் அமுது என்கிறார்.

     (11)