516.

    பொய்யனேன் பிழைக ளெல்லாம்
        பொறுத்திடல் வேண்டும் போற்றி
    கையனேன் றன்னை யின்னும்
        காத்திடல் வேண்டும் போற்றி
    மெய்யனே மெய்ய ருள்ளம்
        மேவிய விளைவே போற்றி
    ஐயனே அப்ப னேயெம்
        அரசனே போற்றி போற்றி.

உரை:

     பொய்யை யுடையவனாகிய யான் செய்த பிழைகள் அனைத்தையும் பொறுத்தருள வேண்டும்; சிறுமையையுடைய என்னை இப்பொழுதும் காத்தருள வேண்டும்; மெய்ம்மையையே யுடையவனே, மெய்ம்மையாளருடைய மனத்தின்கண் அம் மெய்ம்மை யறத்தின் விளைவாக எழுந்தருள்பவனே, ஐயனே, அப்பனே, எமக்கு அரசனே, போற்றி, போற்றி, எ. று.

     ஐயன், அப்பன் என்பன ஆர்வ மொழிகள். பொய் யுடம்பும், பொய்ப் பொருளும், பொய்ம் மொழியும் உடையனாதலால் என்பால் பொய்யல்ல தில்லை என்பார், “பொய்யனேன்” எனவும், எனவே, பிழைகளே நிறைந்துள்ளன; அவற்றை நீயே பொறுத்தருள வேண்டும் என வேண்டுவாராய்ப் “பிழைகளெல்லாம் பொறுத்திடல் வேண்டும்” எனவும் புகல்கின்றார். கை - சிறுமை. சிற்றுணர்வும் சிறுசெயலும் உடைமையின், “கையனேன்” என்று தம்மையே பழிக்கின்றார். உன் திருவருள் மெய்ம்மையும் நன்மையும் உணர்ந்த இப்பொழுதும் என் சிறுமை நீங்காமையின் காத்தல் முறையாகும் என்றற்கு, “இன்னும் காத்திடல் வேண்டும்” என்றும், மெய்ம்மையாளர்க்கு மெய்ம்மை யறத்தின் நலமனைத்தும் இனிதின் எய்துவிக்கின்றாய் என்பாராய், “மெய்யருள்ளம் மேவிய விளைவே” என்றும் இயம்புகின்றார்.

     (12)