517. முருகநின் பாதம் போற்றி
முளரியங் கண்ணற் கன்பாம்
மருகநின் கழல்கள் போற்றி
வானவர் முதல்வ போற்றி
பெருகருள் வாரி போற்றி
பெருங்குணப் பொருப்பே போற்றி
தருகநின் கருணை போற்றி
சாமிநின் னடிகள் போற்றி.
உரை: முருகப்பெருமானே, தாமரை போலும் கண்களையுடைய திருமாலுக்கு அன்புடைய மருகனே, தேவர்களுக்கு முதல்வனே, திருவருள் பெருக நல்கும் கடலே, பெருமை சான்ற குணங்களாலாகிய மலையே, நினது திருவருளைத் தந்தருள்க; திருவடிகள் போற்றி, போற்றி, எ. று.
முருக, மருக, முதல்வ, சாமி என வருவன பொதுநிலை ஆர்வ வுரை. வாரி, பொருப்பு என்பன இயல் நலம் கூறிய ஆர்வ மொழிகள். கருணை தருக என்பது விண்ணப்பம். வாரி - கடல். குணப் பொருப்பு - குணக் குன்று. (13)
|