518. கோதிலாக் குணத்தோய் போற்றி
குகேசநின் பாதம் போற்றி
தீதிலாச் சிந்தை மேவும்
சிவபரஞ் சோதி போற்றி
போதினான் முகனுங் காணாப்
பூரண வடிவ போற்றி
ஆதிநின் றாள்கள் போற்றி
அனாதிநின் னடிகள் போற்றி.
உரை: குற்ற மில்லாத குணத்தை யுடையவனே, குகனாகிய ஈசனே, தீமை யில்லாதாருடைய மனத்தின்கண் எழுந்தருளும் சிவபரஞ் சோதி, தாமரைப் பூவிலிருக்கும் நான்கு முகங்களை யுடைய பிரமதேவனும் நேரிற் காண முடியாத நிறைந்த வடிவமே, ஆதியும் அனாதியாயும் உள்ளவனே, நின் திருவடிகள் போற்றி, எ. று.
குற்றமும் குணமும் நோக்கும் இயல்புடைய மக்களறிவால் நோக்கப் படுதலால், “கோதிலாக் குணத்தோய்” என அழைக்கின்றார். கோது - குற்றம். குற்ற மென்பதே யின்றிக் குணமே யுடையவனே என்பது கருத்து. குகன் - அன்பர்களின் மனமாகிய குகையில் இருப்பவன். தீதிலாச் சிந்தை - அறத்துக்கு மாறாயவற்றைச் சிந்தியாத மனம். சிவபரம் சோதி - சிவமாகிய மேலான ஒளி. போது - தாமரைப் பூ. பூரண வடிவு - வடி வழகிற் குறைவில்லாத நிறைவு. ஆதி - தோற்ற முடையது; அனாதி - தோற்றக் கேடு இல்லாதது. (14)
|