52. வேல்கொண்ட கையும் விறல்கொண்ட தோளும்
விளங்கு மயில்
மேல்கொண்ட வீறும் மலர்முக மாறும்
விரைக்கமலக்
கால்கொண்ட வீரக்கழலும் கண்டாலன்றிக்
காம னெய்யும்
கோல்கொண்ட வன்மை யறுமோ தணிகைக்
குருபரனே.
உரை: திருத்தணிகை மலைமேல் எழுந்தருளும் குருபரனே, வேலேந்திய கையும் வெற்றி யுற்ற தோள்களும் விளங்குகின்ற மயில் மேல் இவரும் தனிச் சிறப்பும் தாமரை போலும் முகங்கள் ஆறும் மணம் பொருந்திய தாமரை போலும் திருவடியில் அணிந்த வீரக்கண்டையும் கண்ணாரக் கண்டாலன்றிக் காமவேள் செலுத்தும் மலரம்புகளின் வன்மை கெடாது, காண், எ. று.
சிவசத்தியின் வடிவாதலின் வேல் ஏந்திய கையை எடுத்து மொழிகின்றார். தோல்வி கண்டறியாத தோள் என்பதனால் “விறல் கண்ட தோள்” என்று கூறுகிறார். மயில் மேல் எழுந்தருளும் தோற்றம் பிறர் எவர்க்குமில்லாத சிறப்பாதலின், “மயில் மேல் கொண்ட வீறு” எனப் புகழ்கின்றார். அருளொழுகும் மாண்புடைய வாதலால் “மலர் முகம்” எனவும், அடைந்தார் வினையைக் கழற்றும் சிறப்புடைமை பற்றி “வீரக் கழலும்” விதந்து காட்டப்படுகின்றன. உயிர்கட்கு உடம்பு படைத்தளிக்கும் ஒள்ளிய செயலுடையவை யாதலால் காமன் அம்பு மிக்க வன்மையுடைய வாகும்; ஆதலாற்றான், முருகப் பெருமானுடைய திருவுருக் காட்சி பெற்றாலன்றிக் காம வேட்கை யறாது என்ற கருத்துப்பட, “காமன் எய்யும் கோல் கொண்ட வன்மை அறுமோ” என மொழிகின்றார். கோல், ஈண்டு அம்பின் மேற்று.
இதனால், காம வேதனைக்கு மாற்று மருந்து முருகன் திருவுருவக் காட்சி பெறுதல் என்பதாம். (52)
|