526.

     வேங்கை மரமாகி நின்றாண்டி - வந்த
          வேடர் தமையெலாம் வென்றாண்டி
     தீங்குசெய் சூரனைக் கொன்றாண்டி - அந்தத்
          தீரனைப் பாடி யடியுங்கடி.

உரை:

     வேடர், வள்ளி யம்மைக்கு உறவினராகிய வேடர்கள். வெட்டி வீழ்த்தக் கருதிய வேடர்கள் கருத்தை மாற்றி வள்ளிக்குக் காவலாகத் தெய்வம் புணர்த்த மரம் இது என நினைந்து வெட்டாமல் செல்லச் செய்தது பற்றி, “வேடர்தமை யெலாம் வென்றாண்டி” எனச் சொல்லுகின்றார். முரட்டுத் தனமாய் வெட்டுதற்கு முன் வந்த வேடர் சிலர் மயங்கி வீழ்ந்து பின் தெளிவுறச் செய்ததும் வெற்றி யென அறிக. சூரன் - சூரவன்மா. தீங்கு செய்த சூரவன்மா வேலால் தாக்குண்டு மீள அசுர வடிவு பெறாதொழிந்தமையால், “கொன்றாண்டி” என்கின்றார். கொலை குறித்து வந்தவரைக் கொல்லாமல் தீயவரைக் கொன்றதும், நல்லவரை அருளியதும் தீரம் என்றற்குத் “தீரன்” என்று சிறப்பிக்கின்றார்.

     (4)