53. குருவே யயனரி யாதியர் போற்றக்
குறை தவிர்ப்பான்
வருவேல் பிடித்து மகிழ் வள்ளலே
குண மாமலையே
தருவே தணிகைத் தயாநிதியே துன்பச்
சாகரமாம்
கருவே ரறுத்திக் கடையனைக் காக்கக்
கடன் உனக்கே.
உரை: திருத் தணிகையில் எழுந்தருளும் அருட் செல்வமே, கற்பக மரம் போல்பனே, ஞானாசிரியனே, பிரமன் திருமால் முதலியோர் போற்றி வழிபட்ட வழி அவர்கட்கு நேர்ந்த குறைகளை நீக்கும் பொருட்டுச் சிவன் தர வந்த வேற்படையைக் கைக் கொண்டு மகிழும் வள்ளலே, சிற் குணங்களால் இயன்ற மலை போல்பவனே, துன்பக் கடலாகிய பிறப்பின் வேரை அறுத்துக் கடையனாகிய என்னைக் காத்தற்குத் திருவுள்ளம் கொள்வது உனக்குக் கடமையாம், எ. று.
பிரணவப் பொருளைச் சிவனுக்கும் சிவஞானத்தை அகத்தியர்க்கும் பிறர்க்கும் உரைத்தருளினான் அறுமுகப் பெருமான் என்று புராணம் கூறுதலால் “குருவே” என்று கூறுகின்றார். “எப்படைக்கும் நாயகமாவ தொரு தனிச்சுடர் வேல் நல்கியே மதலை கைக்கொடுத்தான்” (உற்பத்தி : விடைபெறு. 38) என்று கந்த புராணம் உரைப்பதால், “வருவேல்” என்று சிறப்பிக்கின்றார். தான் பெற்ற இன்பம் தன்னை அடைந்தார் பெறக்கண்டு மகிழும் பெருவள்ளல் என்றற்கு “மகிழ் வள்ளலே” என்றும், சலிப்பறியாத் தன்மையனாதலால் “குணமா மலையே” என்றும், வேண்டுவார் வேண்டிற்றீதலால் “தருவே” என்றும், பரவுகின்றார. தயாநிதி - அருளாகிய செல்வம். துன்பச் சாகரம் - துன்பக்கடல். கரு - பிறப்பு. கருவேர் அறுத்தலாவது, இனிப் பிறவாவகை யருளுதல். “பிறவிவேர் அறுத்தென் குடி முழுதாண்ட பிஞ்ஞகா” (பிடித்த. 6) என்பது திருவாசகம்.
இதனால், துன்பக் கடலாகிய பிறவிக்குள் இனியும் எய்தாவாறு அருளுக என வேண்டிக் கொண்டவாறாம (53)
|