534.

    சைவம் தழைக்கத் தழைத்தாண்டி - ஞான
        சம்பந்தப் பேர்கொண் டழைத்தாண்டி
    பொய்வந்த உள்ளத்திற் போகாண்டி - அந்தப்
        புண்ணியன் பொன்னடி போற்றுங்கடி.

உரை:

     சைவம், சிவத்தோடு தொடர்புறும் சமய நெறி. முருகவழிபாடு சைவத்தின் வேறன்று என்பதற்குச் “சைவம் தழைக்கத் தழைத்தாண்டி” என்று கூறுகிறார். சடை முடியும், தோலாடையும், திருநீற்றுப் பூச்சும், அக்குமணி மாலையும் சைவக் கோலமாய்ச் சிவனுக்கே சைவன் என்று பெயர் தந்துள்ளன. “அறையணி நல்லூர்ச் சைவனார்” என ஞானசம்பந்தரும், “தாட் செய்ய தாமரைச் சைவன்” (குலாப்) என மாணிக்கவாசகரும் உரைப்பர். முருகப் பெருமான் தான் பிற்காலத்தே திருஞான சம்பந்தராய்த் தோன்றினா ரெனப் பிற்காலத் தெழுந்த கொள்கை, வள்ளலார் காலத்திலும் நிலவினமையால், “ஞானசம்பந்தப் பேர் கொண்டழைத்தாண்டி” எனப் பாடுகிறார். பொய் வந்த உள்ளம் - பொய்யும் பொய்க் கொள்கைகளும் நிறைந்த மனம்.

     (12)