535. வாசி நடத்தித் தருவாண்டி - ஒரு
வாசியில் இங்கே வருவாண்டி
ஆசில் கருணை யுருவாண்டி - அவன்
அற்புதத் தாண்மலர் ஏத்துங்கடி.
உரை: வாசி - மூச்சுக் காற்றை நிறுத்தியும் விடுத்தும் மூலக் கனலை யெழுப்பிக் குண்டலினி என்னும் சத்தியை மேலே பிரமரந்தரத்தின் வழியாகத் துவாத சாந்தத்துக்குச் செலுத்தும் யோக முறை; ஆதார யோக வாசி முறை என்றும் கூறுவர். இதனையும் நடத்திக் காட்டும் குருபரன் என்றற்கு, “வாசி நடத்தித் தருவாண்டி” என்று கூறுகிறார். சுவாசிக்கும் காற்று, வாசி யாயிற்று, ஒருவாசி - ஒரு மயில். வாசம் பண்ணுதற்கு வாகனமாகிய மயில் வாசி யெனப் படுகிறது. ஆசு - குற்றம், இங்கே குறை என்பது பொருள். தாள் மலர் - திருவடியாகிய தாமரை. (13)
|