54. உனக்கே விழைவு கொண் டோலமிட்
டோங்கி யுலறுகின்றேன்
எனக்கே யருளித் தமியேன் பிழையுளத்
தெண்ணி யிடேல்
புனக்கேழ் மணவல்லியைப் புணர்ந் தாண்டருள்
புண்ணியனே
மனக்கேத மாற்றும் தணிகாசலத்தமர்
வானவனே.
உரை: தன்னைப் பரவுவோர் மனக்கவலையைப் போக்கும் தணிகை மலையில் இருக்கும் தெய்வமே, புனத்தில் வளர்ந்த மரகத மணி போன்ற வள்ளிநாயகியாரை மணந்து கொண்டு உயிர்கட்கு அருள் புரிகின்ற புண்ணிய மூர்த்தியே, உன்பால் விருப்பமுற்று மிகவும் ஓலமிட்டு நாவுலர்ந்து வாடுகின்ற எனக்கு அருள் தருவாயாக; தமியனாகிய என் பிழைகளை நின் திருவுள்ளத்திற் கொள்ள வேண்டா, எ.று.
புனம் - தினைக்கொல்லை. கேழ்மணி - நிறமுடைய மணி; ஈண்டு மரகத மணிமேற்று. வள்ளி நாயகியாரின் திருமேனி மரகத மணி போல்வதென்ப. வள்ளியொடு கூடி உலகுயிர்களைப் புரக்கின்றானாகலின், “கேழ் மணி வல்லியைப் புணர்ந்து ஆண்டருள் புண்ணியனே” என்று புகல்கின்றார். புண்ணியன் - புண்ணிய - மூர்த்தியான கடவுள். கேதம்-கவலை. வானவன்-தேவன். உனக்கு என்றவிடத்து, ஏழாவதன்கண் நான்காமுருபு மயங்கிற்று. ஓங்கி ஓலமிட்டு உலறுகின்றேன் என இயையும். ஓங்குதல் - மிகுதல், உலறுதல் - வருத்த மிகுதியால் மேனி வற்றுதல். உலகத் தொடர்பின்றி நிற்கின்றமை புலப்படத் “தமியேன்” என்கின்றார். ஒருவர் செய்த பிழைகளை மனத்திற் கொண்ட வழி இரக்க முண்டாகாதாகலின், “தமியேன் பிழை உளத்து எண்ணியிடேல்” என வேண்டுகிறார்.
இதனால், என் பிழைகளை மனங் கொள்ளாமல் நினது அருளைச் செய்க என்று வேண்டிக் கொண்டவாறாம். (54)
|